

சென்னை:
சென்னை ஐகோர்ட்டில் சாகுல்ஹமீது என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனுவில், கூறியிருப்பதாவது:-
‘தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகே 500 மீட்டர் தூரத்துக்கு மதுபானக் கடைகள் அமைக்கக்கூடாது.
ஏற்கனவே உள்ள கடைகளை அகற்றவேண்டும் என்று கடந்த மார்ச் 31-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி தமிழகத்தில் நெடுஞ்சாலை அருகேயுள்ள சுமார் 3 ஆயிரம் மதுபானக் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டது.
ஆனால், நெடுஞ்சாலைக்கு மிக அருகே உள்ள விமான நிலையங்களில் உள்ள வரியில்லாத மதுபான விற்பனை கடைகள், ராணுவ கேண்டீன்களில் மதுபான விற்பனை நடைபெறுகிறது. இது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக உள்ளது’
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர், ‘சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னர், நெடுஞ்சாலைகளுக்கு மிக அருகே ராணுவ கேண்டீன், விமான நிலையங்களில் எப்படி மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது? இதற்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? என்று கேள்வி எழுப்பினர்.
இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 24-ந் தேதிக்கு தள்ளிவைத்தனர்.