எஸ்.வி சேகர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு

பத்திரிகையாளர்களை தரக்குறைவாக பேசிய வழக்கில் முன்ஜாமின் கோரிய எஸ்.வி சேகரின் மனுவுக்கு போலீஸ் தரப்பில் பதில் அளிக்காததால் மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட் தள்ளிவைத்துள்ளது. #SVeShekher
எஸ்.வி சேகர் முன்ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு - ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

மாணவிகளை ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தியதாக பேராசிரியர் நிர்மலாதேவி அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது ஒரு பெண் நிருபர் கேள்வி கேட்டபோது, அவரது கன்னத்தை தொட்டு பேசினார். கவர்னரின் இந்த செயல் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து அந்த பெண் நிருபரிடம், தன் செயலுக்காக கவர்னர் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில், இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி பா.ஜ.க., பிரமுகரும், நடிகருமான எஸ்.வி.சேகர், சமூக வலை தளத்தில் பெண் செய்தியாளர்களுக்கு எதிராக அவதூறான, கீழ்தரமான கருத்துக்களை பதிவிட்டார். எஸ்.வி.சேகரின் செயலுக்கு, பத்திரிகையாளர்கள் மட்டுமல்லாமல், பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். அவருக்கு எதிராக போலீசில் புகார் செய்யப்பட்டது.

இதையடுத்து, எஸ்.வி. சேகரும் மன்னிப்பு கோரினார். தனக்கு வந்த ஒரு பதிவை படித்துப் பார்க்காமல் அப்படியே தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டு விட்டதாக விளக்கம் அளித்தார். இந்த நிலையில், எஸ்.வி.சேகருக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில், எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘பெண்ணினத்தையோ, குறிப்பாக பத்திரிகையாளர் சமூகத்தையோ அவமதிக்கும் உள் நோக்கமோ அல்லது குற்ற எண்ணமோ எனக்கு எள்ளளவும் கிடையாது’ என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், ‘சமூக வலைதளங்களில் வரும் செய்திகளை பொதுத்தளத்தில் பகிர்வது என்ற பழக்கத்தின் அடிப்படையில், இந்த செய்தியையும் முழுமையாக படித்துப்பார்க்காமல், அப்படியே பதிவு செய்து விட்டேன்.

வேறு எந்த தவறையும் நான் செய்யவில்லை. இதற்காக பகிரங்க மன்னிப்பும் கோரியுள்ளேன். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். இவருக்கு முன்ஜாமீன் கொடுக்கக்கூடாது என்று பத்திரிகையாளர் முரளி கிருஷ்ணன் சின்னதுரை என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில், எஸ்.வி. சேகர் முன் ஜாமீன் மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்.வி. சேகர் தரப்பில் வக்கீல் மயிலை சத்தியாவும், முரளி கிருஷ்ணன் சின்னத்துரை சார்பில் வக்கீல் டி.அருணும் ஆஜரானார்கள்.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் முகமது ரியாஸ், ‘இந்த முன்ஜாமீன் மனு குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் இருந்து எந்த ஒரு பதிலும் தனக்கு இதுவரை வரவில்லை’ என்றார். இதையடுத்து இந்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை வருகிற சனிக்கிழமைக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார். #SVeShekher

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com