

சென்னை:
மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு புறம்பாக 2016-17 கல்வியாண்டில் புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அங்குள்ள 4 நிகர்நிலை மருத்துவ கல்லூரிகள், 3 தனியார் மருத்துவ கல்லூரிகளில் படித்து வந்த 778 மாணவர்களை நீக்கி புதுச்சேரி அரசு கடந்த 14-ந் தேதி உத்தரவு பிறப்பித்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மருத்துவ மாணவி திவ்யா உட்பட 108 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில், புதுச்சேரி அரசின் உத்தரவை ரத்து செய்து தங்களது மருத்துவ படிப்பை தொடர அனுமதிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரவிச்சந்திரபாபு , செப்டம்பர் மாதம் 14ந் தேதி இந்திய மருத்துவ கவுன்சிலின் பரிந்துரையின் அடிப்படையில் புதுச்சேரி அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மாணவர்களின் தேர்வு முடிவுகளை வரும் 25-ந் தேதி வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட்டார். மேலும் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 6-ந் தேதிக்கு தள்ளிவைத்தார்.