இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலை எடுத்துச் செல்லலாம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

இறக்குமதி செய்யப்பட்டு தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கி கிடக்கும் மலேசிய மணலை வெளியே எடுத்துச் செல்வதற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்துள்ளது.
இறக்குமதி செய்யப்பட்ட மலேசிய மணலை எடுத்துச் செல்லலாம்: உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி
Published on

புதுக்கோட்டை ஆவுடையார்கோவில் எம்.ஆர்.எம். ராமையா எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிர்வாக இயக்குநர் ராமையா, மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பனை செய்ய அனுமதி வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.

‘வெளிநாடுகளிலிருந்து மணல் இறக்குமதி செய்ய மத்திய அரசிடம் உரிமம் பெற்றோம். அதன்பேரில், மலேசியாவில் இருந்து 53,334 மெட்ரிக் டன் மணல் இறக்குமதி செய்தோம். மொத்த மணலும் தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜிஎஸ்டி வரியாக ரூ. 38,39,347 செலுத்தி உள்ளோம். ஆனால், தமிழகத்தில் அரசு நேரடியாக மணல் விற்பனையில் ஈடுபட்டிருக்கும் நிலையில், தனியார்கள் மணல் விற்பனை செய்வதற்கு தமிழக கனிம வள சட்டப்படி அனுமதி பெற வேண்டும் என்று வருவாய் அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் துறைமுகத்தில் இருந்து மணலை வெளியே எடுத்துச் செல்வதற்கும் அனுமதி மறுத்துள்ளனர்.

வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்வது, அதை விற்பனை செய்வது என்பது மத்திய அரசின் சட்டத்துக்கு உட்பட்டது. இதில் மாநில அரசு அதிகாரிகள் தலையிட முடியாது. எனவே மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை வாடிக்கையாளர்களுக்கு வழங்க அனுமதி வழங்கவும், பறிமுதல் செய்த 6 லாரிகளையும் அதில் இருந்த மணலையும் திரும்ப ஒப்படைக்கவும் உத்தரவிட வேண்டும்’ என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணலை விற்பதற்கு தமிழகத்தில் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், வழிகாட்டுதல்கள் குறித்து நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அதன்படி பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மலேசிய மணல் விற்பனை தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, தூத்துக்குடி துறைமுகத்தில் முடங்கி கிடக்கும் மலேசிய மணலை எடுத்து செல்ல அனுமதி வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன்,  வெளிநாடுகளில் இருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு உரிய அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

“தமிழகத்தில் உள்ள அனைத்து மணல் குவாரிகளையும் 6 மாதத்திற்குள் மூட வேண்டும். புதிதாக மணல் குவாரிகளை திறக்க அனுமதிக்க கூடாது.  சட்டவிரோதமாக மணல் எடுத்து செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறக்குமதி செய்த மணல் மூலம் தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். மேலும் மணல் இறக்குமதி  குறித்து முறையான விதிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும்’ என்றும்  நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

மக்கள் நலன், இயற்கை வளம், விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com