வேலைக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

போராட்டம் நடத்தும் போக்குவரத்து தொழிலாளர்கள் உடனடியாக பணிக்குத் திரும்பாவிட்டால் அவர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
வேலைக்கு திரும்பாவிட்டால் எஸ்மா சட்டம் பாயும்: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
Published on

மதுரை:

தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 13-வது சம்பள கமிஷன் அமல்படுத்துதல், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன் உள்ளிட்ட நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது. இரண்டாவது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான அரசு பஸ்கள் ஓடவில்லை. ஒரு சில பஸ்களே இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தை சட்டவிரோதமாக அறிவிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று பிற்பகல் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணை நடத்திய நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டனர். பணிக்கு திரும்பாத ஊழியர்கள் மீது எஸ்மா சட்டம் பாயும் என்றும் எச்சரித்தனர்.

மேலும், இவ்வழக்கில் நாளை காலை மத்திய-மாநில அரசுகளின் துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com