நிர்பயா பெண் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்

நிர்பயா பெண் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
நிர்பயா பெண் பாதுகாப்பு திட்டங்களை நடைமுறைப்படுத்தக்கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகள் பதில் அளிக்க நோட்டீஸ்
Published on

மதுரை:

மதுரையைச் சேர்ந்த கார்த்தி மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:-

2012-ம் ஆண்டு டெல்லியில் கூட்டு பாலியல் வன்முறைக்கு இளம்பெண் ஆளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து 2013-ல் நிர்பயா நிதித்திட்டம் உருவாக்கப்பட்டு, அதன் கீழ் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவது, பெண்களுக்கான சிறப்பு உதவி மையத்தை அமைப்பது, மகிளா காவல் வாலண்டியர்ஸ் அமைப்பை உருவாக்குவது, அவசர கால உதவி அமைப்பை உருவாக்குவது, ரெயில் நிலையங்களிலும் இந்த அமைப்பை உருவாக்குவதோடு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது ஆகிய செயல்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமென மத்திய அரசு தீர்மானித்தது.

ஆனால் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு 5 ஆண்டுகள் ஆன நிலையிலும் தமிழக அரசு அந்த திட்டத்தை முறையாக செயல்படுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

சென்னை தாம்பரத்தில் தற்காலிகமாக ஒரு பெண்களுக்கான உதவி மையம் இயங்கி வருகிறது. பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், திருமண நிதியுதவி ஆகியவற்றை வழங்கும் தமிழக அரசு நிர்பயா திட்டத்தின் திட்டங்களை நடைமுறைப்படுத்த முயற்சி எடுக்கவில்லை.

இது குறித்து தொடர்புடைய அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஆகவே, “2013ல் மத்திய அரசு அறிவித்த நிர்பயா நிதித்திட்டத்தின் கீழான உதவித்திட்டங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

மேற்கண்டவாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன், ஹேமலதா அமர்வு, இது குறித்து மத்திய,மாநில அரசுகள் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஏப்ரல் 25-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com