

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று டெல்லியில் 8 மணிக்கு தொடங்கிய 87-வது லீக் ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் எப்.சி. - எப்.சி. புனே சிட்டி அணிகள் மோதின.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தின் 10-வது நிமிடமே டெல்லி அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் கலு உச்சே கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து 13-வது நிமிடத்தில் புனே அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதை சரியாக பயன்படுத்திகொண்ட எமிலியானோ அல்பரோ கோல் அடித்தார். பின்னர் 34-வது நிமிடத்தில் டெல்லி அணியின் கலு உச்சே இரண்டாவது கோல் அடித்தார். இதனால் முதல் பாதிநேர ஆட்டத்தில் டெல்லி அணி 2-1 என முன்னிலை வகித்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 86-வது நிமிடத்தில் 86-வது நிமிடம் புனே அணிக்கு மற்றொரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் எமிலியானோ அல்பரோ இரண்டாவது கோல் அடித்தார். அதன்பின் கோல் அடிக்கப்படாததால் இந்த போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.