

10 அணிகள் இடையிலான 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்று சென்னையில் 8 மணிக்கு தொடங்கிய 88-வது லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின. இது இரு அணியினருக்கும் கடைசி லீக் ஆட்டமாகும்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதிநேர ஆட்டம் 0-0 என சமனில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்தின் 67-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பில் ரினே மிஹெலிக் கோல் அடித்தார். அதன்பின் இரு அணியினரும் மேற்கொண்டு கோல் அடிக்காததால் இந்த கோல் சென்னை அணியின் வெற்றி கோலாக அமைந்தது. இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற சென்னை அணி இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் லீக் சுற்றை வெற்றியுடன் நிறைவு செய்தது.