சபரிமலை:
சபரிமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பம்பை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதைத்தொடர்ந்து பம்பை ஆற்றில் பக்தர்கள் குளிக்கும் போது மிகவும் கவனம் தேவை என எச்சரிக்கப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளது. சபரிமலையில் காற்றுடன் தொடர்ந்து மழை பெய்து வருவதால், சன்னிதான பகுதிகளில் உள்ள மரங்கள் முறிந்து விழுந்தபடி உள்ளன. இதனால் பக்தர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர்.
நேற்று சபரிமலையில் பம்பை ஆற்றின் கரையோர பகுதிகள் மற்றும் திருவேணி பகுதிகளில் நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்களை மேடான பகுதிகளுக்கு கொண்டு செல்ல போலீசார் உத்தரவிட்டனர்.
இதுதவிர வனப்பகுதியில் பலத்த மழை பெய்வதால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அய்யப்ப பக்தர்கள் கவனத்துடன் வாகனங்களை இயக்க அறிவுறுத்தப்பட்டனர்.
கேரளாவில் திருவனந்தபுரம், கொல்லம், கோட்டயம், ஆலப்புழை மற்றும் பத்தனம் திட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக திருவனந்தபுரம்- கன்னியாகுமரி இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கேரளாவில் கடலோர பகுதிகளில் மணிக்கு 75 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கேரளாவில் பல மாவட்டங்களில் இன்னும் 2 நாட்கள் மழை நீடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்ற 7 வள்ளங்கள் மாயமானதாக கூறப்படுகிறது. மேலும் வெட்டுக்காடு பகுதியில் கடலுக்கு சென்ற ஒரு மீனவர் இன்னும் கரைக்கு திரும்பவில்லை. எனவே இந்த தகவல் மீனவ மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது.