விடிய, விடிய மழை: சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சென்னையில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
விடிய, விடிய மழை: சென்னை நகரில் வெள்ளப்பெருக்கு
Published on

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (27-ந்தேதி) தொடங்கியது.

இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் வெள்ளி, சனிக்கிழமைகளில் பரவலாக மழை பெய்தது.

இந்த நிலையில் தென் மேற்கு வங்கக்கடலில் தமிழ்நாட்டின் அருகே கடந்த சனிக்கிழமை வளிமண்டலத்தில் மேலடுக்குச் சுழற்சி உருவானது. நேற்று முன்தினம் அது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை அருகே மையம் கொண்டிருந்தது. நேற்று அந்த மேலடுக்கு சுழற்சி சற்று மேற்கு நோக்கி நகர்ந்தது.

இதன் காரணமாக தமிழ்நாட்டில் 10 கடலோர மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியது. அதன்படி நேற்று சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களில் அதிக மழை பெய்தது.

நேற்று காலை முதல் தீவிரமான மழை பகல் முழுவதும் நீடித்தது. இதன் காரணமாக சென்னையில் 500-க்கும் மேற்பட்ட இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் வெள்ளம்போல தேங்கி உள்ளது. நேற்று மதியமே பல இடங்களில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் நேற்று மாலையும், இரவும் மழை வெளுத்து வாங்கியது. சென்னையிலும் புறநகர் பகுதிகளிலும் விடிய, விடிய மழை பெய்தது.

மேலடுக்கு சுழற்சி நெருங்கி வருவதால் வங்க கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் சென்னையில் இருந்து மீனவர்கள் யாரும் நேற்று கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தவர்களும் கரை திரும்பி விட்டனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு மிக பலத்த மழை பெய்தது. இதனால் இன்று மழை பாதிப்பு சற்று அதிகமாக காணப்பட்டது. வட சென்னை பகுதி மக்கள் அதிகமான அவதிக்குள்ளானார்கள்.

ஒவ்வொரு மழை சீசனிலும் லேசாக மழை பெய்ததுமே வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலைய சுரங்கப்பாதை பாலம் தண்ணீரில் மூழ்கி விடும். வழக்கம்போல இந்த தடவையும் அந்த பாலம் மழைத் தண்ணீரில் மூழ்கியது. தண்ணீரை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் நேற்றே ராட்சத பம்புசெட் கொண்டு வந்து வைத்தனர்.

ஆனால் தண்ணீரை வெளியேற்ற, வெளியேற்ற மழையும் நீடித்ததால், அந்த பாலத்தில் தண்ணீர் அளவு குறையவில்லை. அந்த பாலத்தை சுற்றி நாலா புறத்தில் இருந்தும் மழைத் தண்ணீர் வெள்ளம் போல பாய்ந்து வந்தது. இதனால் இன்று காலை மக்கள் அந்த பாலத்தை கடக்க முடியவில்லை.

காலை 7 மணியளவில் அந்த பாலத்தில் தேங்கியுள்ள மழை தண்ணீருக்குள் புகுந்து செல்ல ஒரு மாநகர பஸ் முயன்றது. ஆனால் பாலத்தின் மையப் பகுதிக்கு வந்ததும் அந்த பஸ் தண்ணீரில் சிக்கி நின்று விட்டது. இதனால் அந்த பாலம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அந்த பாலத்தின் ஓரத்தில் மட்டும் மக்கள் தட்டு தடுமாறி நடந்து சென்றனர். அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனங்களை சிலர் பணம் வாங்கிக் கொண்டு மறு கரைக்கு கொண்டு வந்து கொடுத்தனர். அந்த பாலத்து தண்ணீரை முழுமையாக அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சென்னையில் பல இடங்களில் மழைத் தண்ணீரில் மக்கள் தத்தளிக்கும் நிலை பற்றிய தகவல் கிடைத்ததும் மாநகர போலீஸ் கமி‌ஷனர் விசுவநாதன் அத்தகைய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வியாசர்பாடி பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரையும் அவர் பார்த்தார்.

வாகனப் போக்குவரத்து மாற்றுப் பாதைக்கு உதவ அவர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.


பெரம்பூர் ரெயில் நிலைய மேம்பாலத்தின் கீழும் மழைத் தண்ணீர் அதிக அளவு தேங்கியது. அதன் காரணமாக பொதுமக்கள் மேம்பாலத்தில் ஏறி சென்றனர். அதன் அருகே ஸ்டீபன் சாலையில் அருகில் உள்ள ஓடை தண்ணீர் புகுந்து வெள்ளம்போல ஓடியது.

ஜமாலியா பகுதியிலும் மழை தண்ணீர் முட்டு அளவுக்கு தேங்கியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து தடைப்பட்டது. டவுட்டனிலும் இதே நிலை காணப்பட்டது.

வியாசர்பாடி கல்யாணபுரத்தில் சென்னை மாநகராட்சி பள்ளி உள்ளது. இங்கு நேற்று இரவு பெய்த பலத்த மழையால் முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.

சேத்துப்பட்டு கெங்கு ரெட்டி பாலத்திலும் தண்ணீர் தேங்கியது. என்றாலும் பம்பு மூலம் அந்த தண்ணீர் உடனுக்குடன் அகற்றப்பட்டது. தென்சென்னையிலும் பல சாலைகளில் மழை தண்ணீர் தேங்கியுள்ளது.

மழை தொடர்ந்து பெய்யும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதால் சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாநகர பஸ் போக்குவரத்து தாமதம் ஆவதால் பெரும்பாலானவர்கள் மெட்ரோ மற்றும் மின்சார ரெயிலை நாடினார்கள். இதனால் இன்று ரெயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

கொரட்டூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 300 வீடுகள் உள்ளன. கீழ்தளத்தில் உள்ள 150-க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் அவர்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியேறினர்.

இதேபோல அம்பத்தூர் கறுக்கு பகுதியிலும் 100-க்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. பட்ரவாக்கம் பகுதியில் சுமார் 300 வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது. கொரட்டூர், பட்ரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 1000 வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

இதனால் அங்கு குடிநீருடன் கழிவு நீரும் கலந்துள்ளது. பட்ரவாக்கம் பகுதியில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் பணி முடிக்கி விடப்பட்டுள்ளது. அங்குள்ள ரோட்டை துண்டித்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்காக சாலையில் ராட்சத கிரேன் மூலம் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு அருகில் உள்ள ஏரிக்கு செல்கிறது.

தொடர் மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள ஏரி-குளங்கள் நிரம்பி வருகின்றன. ஏற்கனவே தென்மேற்கு பருவமழை 30 சதவீதம் அதிகமாக பெய்ததால் பல மாவட்டங்களில் ஏரி- குளங்கள் நிரம்பி உள்ளன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com