48 மணி நேரத்தில் சென்னையில் பலத்த மழைக்கு வாய்ப்பு

சென்னையில் வெப்பச்சலனம் காரணமாக 48 மணி நேரத்தில் பலத்த மழைபெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரபிக் கடல் மற்றும் வங்க கடலில் உருவான காற்றழுத்தம் காரணமாக மழை கிடைத்து வந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு புயலாக மாறி தமிழகத்தை விட்டு நகர்ந்து சென்றது. இதனால் கடந்த சில நாட்களாக மழையின்றி வறண்ட வானிலை காணப்பட்டது.

காற்று சுழற்சி, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி என எதுவும் உருவாகாததால் மழை அறிகுறி இல்லாமல் இருந்தது. இப்போது மீண்டும் வங்க கடலில் காற்று சுழற்சி உருவாகி வருகிறது. இதனால் மழை வாய்ப்பு அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய மூத்த அதிகாரி கூறியதாவது:-

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக வங்கக் கடலில் உருவாக உள்ள காற்று சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்த வரை வெப்பச்சலனம் காரணமாக 48 மணி நேரத்தில் பலத்த மழைபெய்யவும் வாய்ப்புண்டு.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னையில் இன்று அதிகாலை முதல் ஆங்காங்கே லேசான மழை பெய்தது. மாலையிலும் மழை வரும் சூழ்நிலை உருவாகி உள்ளதாக வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com