

திருவனந்தபுரம்:
கேரளாவில் கடந்த மாதம் 30-ந்தேதி தொடங்கிய தென்மேற்கு பருவமழை தொடர்ந்து 11 நாட்களாக நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது.
மலையோர மாவட்டங்களான கோட்டயம், பாலக்காடு, கண்ணூர், மலப்புரம், வயநாடு போன்ற இடங்களில் இந்த மழை அதிகளவு பெய்துள்ளது. மாநில தலைநகரான திருவனந்தபுரத்திலும் மழை நீடிக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகள், ஏரிகள், குளங்கள் பெருகி வருகின்றன.
ஆதிவாசிகள் குடியிருப்புகள் அதிகம் உள்ள காட்டாக்கடை, செங்கனூர் உள்பட பல்வேறு பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதால் அவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து வெளியில் வரமுடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இதை தொடர்ந்து ஆதிவாசி மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க திருவனந்தபுரம் கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருவனந்தபுரம் நகரில் உள்ள கரமனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
சபரிமலையிலும் தற்போது கனமழை பெய்து வருகிறது. அங்கு நடை திறந்து உள்ளதால் பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் சபரிமலைக்கு சென்று சாமிதரிசனம் செய்து வருகிறார்கள். சபரிமலையில் உள்ள புண்ணிய நதியான பம்பை நதியில் அதிகளவு மழை நீர் வெள்ளம்போல ஓடுகிறது. எனவே இதில் நீராடும் பக்தர்கள் பாதுகாப்பான இடங்களில் மட்டும் நீராடும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
திருவனந்தபுரம் அருகே களக்கூட்டம் தேசிய நெடுஞ்சாலையில் மழை காரணமாக பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகளில் விழுந்துள்ளது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து தற்காலிகமாக பெரிய தார் பாய்களை கொண்டு மண் சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று கொச்சி வானிலை மையம் தெரிவித்துள்ளது. சிறையின் கீழ், கோவளம் போன்ற பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றமாகவே காணப்படுகிறது. இங்குள்ள மீனவர் கிராமங்களுக்குள்ளும் அடிக்கடி கடல்நீர் புகுவதால் மீனவ மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.