

தலைநகர் டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு காரணமாக புகை மூட்டம் நிலவி வருகிறது. அதனால் பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
எதிரே வரும் வாகனங்கள், ஆட்கள் கூட தெரியாத அளவுக்கு காற்று மாசு, புகை மூட்டம் இருக்கிறது. அதனால் பகல் வேளையிலும் வாகனங்களில் விளக்குகளை எரியவிட்டபடி செல்கிறார்கள்.
இதற்கிடையே டெல்லியில் கடும் பனி மூட்டமும் நிலவுவதால் அதனுடன் காற்று மாசும் கலந்து புகை மூட்டம் அதிக அளவுக்கு இருக்கிறது.
காற்று 12 கிலோ மீட்டர் அளவு வீசுகிறது. இதனால் நகரின் அனைத்து பகுதியிலும் புகை மூட்டம் பரவி உள்ளது. இதன் பாதிப்பு நேற்று அதிக அளவில் இருந்தது. இன்று காலையும் அதே நிலை நீடித்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கரும்புகை சூழ்ந்துள்ளதால் டெல்லி நகரமே உறைந்து இருக்கிறது. வெளியே செல்லும் போது முகத்தில் முகமூடி அணிந்து செல்கிறார்கள். வீட்டுக்குள்ளும் புகை வந்துவிடுவதால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.