லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனு ஜார்கண்ட் கோர்ட்டில் தள்ளுபடி

டியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து கால்நடை தீவனம் வாங்குவதற்காக ரூ.89.27 லட்சம் பணம் எடுத்த வழக்கில் தன்னை ஜாமினில் விடுவிக்க கோரிய லாலுவின் மனு தள்ளுபடியானது.
லாலு பிரசாத் யாதவின் ஜாமின் மனு ஜார்கண்ட் கோர்ட்டில் தள்ளுபடி
Published on

ராஞ்சி:

பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை தீவன ஊழல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரி லாலு பிரசாத் யாதவ் மற்றும் மேலும் சிலருக்கு எதிராக மொத்தம் 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  

முதல் வழக்கில் 30-9-2013 அன்று லாலு பிரசாத் யாதவுக்கு ஐந்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, ராஞ்சி சிறையில் அடைக்கப்பட்ட அவர் இரண்டரை மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் விடுதலையாகி அந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.

இரண்டாவது வழக்கில் டியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து கால்நடை தீவனம் வாங்குவதற்காக ரூ.89.27 லட்சம் பணம் சுரண்டப்பட்ட வழக்கை விசாரித்த ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிபதி சிவபால் சிங், லாலுவுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனையும், பத்து லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து 23-12-2017 அன்று தீர்ப்பளித்தார்.

மூன்றாவதாக, சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து முறைகேடாக 37.62 கோடி ரூபாய் எடுத்த வழக்கில் 24-1-2018 அன்று லாலுவுக்கு ஐந்தாண்டுகள் சிறை விதிக்கப்பட்டது.

இதுதவிர தற்போது ராஞ்சி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் லாலு உள்பட சிலர் மீது கால்நடை தீவன ஊழல் தொடர்பாக மேலும் இரு வழக்குகளில் விசாரணை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டியோகர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து கால்நடை தீவனம் வாங்குவதற்காக ரூ.89.27 லட்சம் பணம் எடுத்த வழக்கில் தற்போது தண்டனை அனுபவித்துவரும் தன்னை ஜாமினில் விடுதலை செய்யுமாறு ஜார்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த ஜாமின் மனு நீதிபதி அபரேஷ் சிங் முன்னர் இன்று விசாரணைக்கு வந்தது. லாலுவின் மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.

மேற்படி ஊழலின்போது லாலு பீகார் மாநில நிதி மந்திரியாகவும், முதல் மந்திரியாகவும் இருந்துள்ளார். இதுதொடர்பான கோப்புகள் பொது கணக்கு குழுவிடம் பல ஆண்டுகளாக முடங்கி கிடந்துள்ளது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த ஊழல்கள் எல்லாம் லாலுவுக்கு தெரிந்தே நடந்துள்ளதால் அவரை ஜாமினில் விடுவிக்க முடியாது எனவும் நீதிபதி அபரேஷ் சிங் குறிப்பிட்டுள்ளார். #Tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com