சரவண பவன் ஓட்டல் அதிபரை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் அனுமதி

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சரவண பவன் ஓட்டல் உரிமையாளர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க சென்னை ஐகோர்ட் இன்று அனுமதி அளித்தது.
சரவண பவன் ராஜகோபால்
சரவண பவன் ராஜகோபால்
Published on

சென்னை:

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், உடனடியாக சரணடையும்படி கடந்த வாரம் உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ராஜகோபால் சரணடைவதற்காக ஆம்புலன்சில் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு வந்தார். ராஜகோபாலை சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜகோபாலை நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

சாந்தகுமார் கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஜனார்த்தனனும் ஆம்புலன்சில் வந்து ஆஜரானார். அவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, உடல்நிலை காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் ராஜகோபால் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சரவண பவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க கோரி அவரது மகன் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எம்.நிர்மல் குமார் ஆகியோர் ராஜகோபாலை தனியார் மருத்துவமனையில் சேர்க்க அனுமதி அளித்து உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com