விஷாலை வேட்பாளராக பரிந்துரைத்தவர்கள் கடத்தலா?: வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு

ஆர்.கே நகர் தேர்தலில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனுவில் அவரை முன்மொழிந்த இருவர் கடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
விஷாலை வேட்பாளராக பரிந்துரைத்தவர்கள் கடத்தலா?: வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

ஆர்.கே. நகர் சட்டசபைக்கு கடந்த மாதம் இடைத்தேர்தல் நடந்தபோது, அதில் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்து நடிகர் விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார். அந்த வேட்புமனுவில் தன்னை வேட்பாளராக முன்மொழிந்த சுமதி, தீபக் என்ற இருவர் கடத்தப்பட்டு, மிரட்டப்பட்டதாக விஷால் பரபரப்பு குற்றச்சாட்டை வெளியிட்டார். அவர்கள் பேசிய ஆடியோவையும் வெளியிட்டார்.

இந்நிலையில், தேவராஜன் என்பவர் ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘இந்த ஆடியோ உண்மையானது தானா? அல்லது சமுதாயத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த விஷால் இந்த ஆடியோ வெளியிட்டாரா? அ.தி.மு.க. வேட்பாளர் மதுசூதனின் ஆதரவாளர்கள் இந்த இருவரை கடத்திச் சென்று மிரட்டினார்களா? என்பது குறித்து விசாரணை நடத்த கோரி சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் மனு கொடுத்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, கடந்த டிசம்பர் 6ந் தேதி கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். பின்னர், மனுதாரரின் புகார் மீது முகாந்திரம் இருந்தால், அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்று போலீசாருக்கு உத்தரவிட்டார். #Tamilnews

X

Maalai Malar
www.maalaimalar.com