

இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்வதை தடுக்கும் விதமாக கடந்த மாதம் 23-ந்தேதி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இதற்கு பல மாநிலங்களில் பலர் பல விதமான எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சென்னை ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் படிக்கும் சூரஜ் உள்ளிட்ட மாணவர்கள், மத்திய அரசின் இந்த அறிவிப்பை கண்டித்து கூட்டம் நடத்தினார்கள். இந்த கூட்டம் முடிந்ததும், அனைத்து மாணவர்களும் ஒன்றாக அமர்ந்து மாட்டுக்கறியை சாப்பிட்டனர்.
மத்திய அரசு கல்வி நிறுவனமான ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த இந்த சம்பவம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மே 31-ந் தேதி சூரஜ் என்ற மாணவனை பீகார் மாநிலத்தை சேர்ந்த மணீஸ் என்ற மாணவன் கொடூரமாக தாக்கினான். மாட்டுக்கறி விருந்து நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சூரஜை அந்த மாணவன் தாக்கினார். இதில் படுகாயமடைந்த சூரஜ், அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்து கோட்டூபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில், ஐ.ஐ.டி. மாணவர்கள் அர்ஜூன் ஜெயக்குமார், சாமிநாதன் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் கூட்டாக மனு தாக்கல் செய்தனர்.
அதில், ‘சூரஜ் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சரியான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யவில்லை. மாணவன் மணீஸ் மீது சாதாரண சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கை கோட்டூர்புரம் போலீசார் விசாரித்தால், நியாயமாக இருக்காது. எனவே, துணை கமிஷனர் பதவிக்கு குறையாத போலீஸ் அதிகாரிகளை கொண்டு, இந்த வழக்கை விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.
இந்த மனு நீதிபதி ஆர். மகாதேவன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் வக்கீல் ஜான் சத்தியன் ஆஜராகி, மணீஸ் மீது ஏற்கனவே ஏராளமான மாணவர்கள் ஐ.ஐ.டி. நிர்வாகத்துக்கு புகார் செய்துள்ளனர்.
அவர் மாற்றுக் கருத்துக்களை கொண்டவர்களை தாக்குவதை வழக்கமாக வைத்துள்ளார். மாட்டுக்கறி சாப்பிட்டதற்காக சூரஜை கொடூரமாக தாக்கியுள்ளார். தற்போது சூரஜ் முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
எனவே, ஐ.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்’ என்று கூறினார்.