

சென்னை:
நீலகிரி மாவட்டம், கொடநாட்டில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோருக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு எஸ்டேட் காவலாளியை கொலை செய்து, அங்கு ஒரு கும்பல் கொள்ளை அடித்தது.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கேரளாவை சேர்ந்த சயன், மனோஜ், தீபு உள்பட 10 பேரை கைது செய்தனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளியில் வந்தனர்.
இந்த நிலையில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, இந்த கொலை சம்பவத்தில் தொடர்புபடுத்தி நாரதா என்ற இணையதளம் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியில் சயன், மனோஜ் ஆகியோரது பேட்டியும் வெளியாகின.
இதையடுத்து கொடநாடு கொலை வழக்கை திசை மாற்றுவதாக கூறி சயன், மனோஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை கோர்ட்டு மூலம் போலீசார் ரத்து செய்தனர்.
அவர்களை பிடித்து மீண்டும் சிறையில் அடைத்தனர். இதன்பின்னர், இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஓர் ஆண்டு சிறையில் அடைக்க நீலகிரி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சயன் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் சுந்தரேஷ், டீக்காரமன் ஆகியோர் விசாரித்தனர்.
பின்னர், சயனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நீலகிரி மாவட்ட கலெக்டர் பிறப்பித்த உத்தரவில் பல குறைபாடுகள் உள்ளன என்று கூறி, அவரை சிறையில் அடைத்த கலெக்டரின் உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர்.