சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த் துறையிடம் இருந்து விடுவிப்பு- உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த் துறையிடம் இருந்து விடுவிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்தது.
சாத்தான்குளம் காவல் நிலையம்
சாத்தான்குளம் காவல் நிலையம்
Published on

மதுரை:

சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ்  போலீஸ் விசாரணை காவலில் மரணமடைந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காவல் நிலைய விசாரணையின்போது மிகவும் கொடூரமாக தாக்கப்பட்டதால் போலீசாருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. 

இதுதொடர்பாக விசாரணை நடத்திய மாஜிஸ்திரேட் பாரதிதாசன் தாக்கல் செய்த அறிக்கையில், காவல் நிலையத்தில் வைத்து ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் விடிய விடிய லத்தியால் தாக்கியது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். 

இதனையடுத்து, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க தொடங்கும் வரை சிபிசிஐடி விசாரிக்கும்படி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி சிபிசிஐடி போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலர் ஒருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

அதேசமயம், காவலர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்ததால் நீதிமன்ற உத்தரவின்படி சாத்தான்குளம் காவல் நிலையம் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. மேலும் நீதிமன்ற உத்தரவின்படி தடயவியல் நிபுணர்கள் காவல் நிலையத்தில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். 

இந்நிலையில், இவ்வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாத்தான்குளம் காவல் நிலையத்தை வருவாய்த்துறை கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை இந்த உத்தரவை பிறப்பித்தது. காவல்நிலையத்தில் இருந்த வருவாய்த் துறையினர் தங்கள் பணிக்கு திரும்பவும் உத்தரவிட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com