ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டுகோள்

ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ள நிலையில், குற்றவாளி தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்கும்படி அரசுத் தரப்பு மற்றும் ஹாசினியின் பெற்றோர் தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #HasiniMurderCase
ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: தஷ்வந்துக்கு மரண தண்டனை வழங்க வேண்டுகோள்
Published on

மாங்காடு அடுத்த மவுலிவாக்கத்தை சேர்ந்த 6 வயது சிறுமி ஹாசினி கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அதேபகுதி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்தை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை தொடர்பாக முதலில் அவர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். பின்னர் குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து தஷ்வந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதைதொடர்ந்து அவர் குடும்பத்துடன் குன்றத்தூரில் குடியேறினார். அப்போது செலவுக்கு பணம் கொடுக்காத ஆத்திரத்தில் தாய் சரளாவையும் கத்தியால் குத்தி கொலை செய்தார்.

மும்பையில் பதுங்கி இருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். சிறுமி ஹாசினி கொலை வழக்கு தொடர்பான விசாரணை தனியாக செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் ஹாசினி கொலை வழக்கில் இறுதிகட்ட விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்னிலையில் தினமும் நடந்துவந்தது. 30 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த 14-ந்தேதி வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், பிப்ரவரி 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி வேல்முருகன் அறிவித்தார். அதன்படி இன்று ஹாசினி கொலை வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

தீர்ப்பு வழங்கப்படுவதையொட்டி நீதிமன்றத்தை சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதிமன்றத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். நீதிமன்ற அறைக்குள் காவல்துறை மற்றும் அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். செய்தியாளர்கள் மற்றும் பிற வழக்கறிஞர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தஷ்வந்த் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்ற அறைக்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டான். இதையடுத்து நீதிமன்ற அறையின் கதவுகள் மூடப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com