திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - கோர்ட்டில் சரணடைந்த பள்ளி தாளாளர் சிறையில் அடைப்பு

திருச்சியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த பள்ளி தாளாளரை சிறையில் அடைத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பள்ளி தாளாளர் தர்மராஜ்
பள்ளி தாளாளர் தர்மராஜ்
Published on

திருச்சி:

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே சிறுகனூரில் கருணைபுரி இல்லம் என்ற ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி வளாகத்தில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கான தங்கும் விடுதியும் செயல்பட்டு வருகிறது.

இந்த விடுதியில் தங்குவதற்கும், உணவும் இலவசம் என்பதால் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர். பெரும்பாலும் ஏழை மாணவிகளே இந்த விடுதியில் அதிகம் தங்கியுள்ளனர். இந்த இல்லம் மற்றும் பள்ளியின் தாளாளராக தர்மராஜ் (வயது 65) இருந்து வந்தார். அவர் அவ்வப்போது விடுதிக்கு வந்து ஆய்வு நடத்தி விட்டு செல்வார். அவ்வாறு வரும் சமயங்களில் குறிப்பிட்ட சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார். எதிர்காலம் கெட்டுவிடும் என்பதால் மாணவிகள் பலர் சகித்துக்கொண்டு, வெளியே யாரிடமும் கூறாமல் இருந்து வந்துள்ளனர். இதனை சாதகமாக பயன்படுத்திய தர்மராஜின் பாலியல் சீண்டல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு தாளாளர் தர்மராஜ் தொழுதூர் பகுதியில் இருந்து விடுதியில் தங்கி பயின்று வரும் 8-ம் வகுப்பு மாணவியிடம் அத்துமீறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனை பொறுத்துக்கொள்ள முடியாத அந்த மாணவி தாளாளரின் அறையினை விட்டு வெளியேறி, விடுதியில் உள்ள அறைக்கு சென்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். சக மாணவிகள் அவரை தடுத்து நிறுத்தினர்.

மேலும் இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் விசாரணையில் விடுதியில் தங்கி பயின்று வந்த 5 மாணவிகளுக்கு தர்மராஜ் பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது. இதற்கிடையே அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில், மணப்பாறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்-5ல் அவர் சரணடைந்தார். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதையடுத்து, போலீசார் தர்மராஜை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விசாரணை நடத்தப்படும் பட்சத்தில் இந்த சம்பவத்தில் மேலும் பல்வேறு தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com