மார்த்தாண்டம் அருகே 10-ம் வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம்- ஆசிரியர் மீது வழக்கு

மார்த்தாண்டம் அருகே டியூசன் சென்டரில் ஆபாச படம் காட்டி 10-ம் வகுப்பு மாணவியிடம் செக்ஸ் சில்மி‌ஷம் செய்த பள்ளி ஆசிரியரை போலீசார் தேடி வருகிறார்கள்.
செக்ஸ் சில்மி‌ஷம்
செக்ஸ் சில்மி‌ஷம்
Published on

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே உள்ள இடைக்கோடு பிலாங்காலை பகுதியைச் சேர்ந்தவர் வில்ஸ் (வயது 40). இவர் கல்லுப்பாலம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் வேதியியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவர் பள்ளி அருகே தனியாக டியூசன் சென்டரும் நடத்தி வந்தார். மாலையில் பள்ளி முடிந்ததும் டியூசன் சென்டருக்கு சென்று வகுப்புகள் நடத்தினார். டியூசன் சென்டரில் 10 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வந்தனர்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் டியூசன் சென்டரில் ஆசிரியர் வில்ஸ் சிறப்பு வகுப்புகள் நடத்தினார். வகுப்புகள் முடிந்ததும் 10-ம் வகுப்பு மாணவி ஒருவரை மட்டும் இருக்கச் சொல்லி விட்டு மற்ற அனைவரையும் வீட்டுக்கு அனுப்பினார்.

தனியாக இருந்த அந்த மாணவியை தன் அருகே அழைத்த ஆசிரியர் வில்ஸ், செல்போனில் ஆபாச படங்களை காட்டி செக்ஸ் சில்மி‌ஷம் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் ஆசிரியரிடம் இருந்து தப்பி அந்த மாணவி வீட்டுக்கு சென்றார்.

பெற்றோரிடம் டியூசன் சென்டரில் ஆசிரியர் வில்ஸ், ஆபாச படங்களை காட்டி செக்ஸ் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டதை கூறி மேலும் அழுதார். இதனால் மாணவியின் பெற்றோரும், உறவினர்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் திரண்டு வில்சை தேடி அவரது டியூசன் சென்டருக்கு சென்றனர். அதற்குள் வில்ஸ் அங்கிருந்து மாயமாகி இருந்தார்.

இதனால் மாணவியின் பெற்றோர் குழித்துறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் ஆசிரியர் வில்ஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். வில்ஸ் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இதற்கிடையே வில்சின் நெருங்கிய உறவினர் ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைமறைவான வில்சுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com