ஆண் குழந்தைக்கு உரிமை கொண்டாடிய தாயிடம் பெண் குழந்தை ஒப்படைப்பு

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் ஆண் குழந்தைக்கு உரிமை கொண்டாடிய தாயிடம் பெண் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.
ஜெயமாலினி பெண் குழந்தையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்
ஜெயமாலினி பெண் குழந்தையை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டார்
Published on

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மனைவி ரேகா. இவர் பிரசவத்துக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கடலூர் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அணுக்கம்பட்டு பெரியகாட்டுசாகையை சேர்ந்தவர் முருகன். கார் டிரைவர். இவரது மனைவி ஜெயமாலினி. இவரும் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவரையும் பிரசவத்துக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவர்கள் 2 பேருக்கும் நேற்று முன்தினம் இரவு குழந்தைகள் பிறந்தது. ரேகாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததாகவும், ஜெயமாலினிக்கு பெண் குழந்தை பிறந்ததாகவும் டாக்டர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் ஜெயமாலினியின் மாமியார் வைரம் என்பவர் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது மருமகளுக்கு ஆண் குழந்தைதான் பிறந்தது. அந்த குழந்தைதான் எங்களுக்கு வேண்டும் என்று கூறினார்.

ஆனால், ரேகாவின் உறவினர்களோ ரேகாவுக்குதான் ஆண் குழந்தை பிறந்தது என்றனர். இதனால் ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


ஒரு ஆண் குழந்தைக்கு 2 பெண்கள் உரிமை கொண்டாடினர். இதனால் ஆண் குழந்தை யாருக்கு பிறந்தது என்பது பிரச்சனையானது. இதை கண்டறிவதற்காக ஜெயமாலினிக்கும், குழந்தைக்கும் டி.என்.ஏ. பரிசோதனை நடத்த டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இந்த நிலையில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு டாக்டர் ஹபீசா இன்று ஜெயமாலினி, அவரது கணவர் முருகன் மற்றும் மாமியார் வைரம் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.

வைரத்திடம் விசாரணை நடத்திய போது எனக்கு கண் சரியாக தெரியாததால் எனது மருமகளுக்கு ஆண் குழந்தை பிறந்தது என்று முதலில் தெரியாமல் கூறிவிட்டேன். ஆனால், எனது மருமகளுக்கு பிறந்தது பெண்குழந்தைதான். அதனை நாங்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம் என்றார்.

ஜெயமாலினியின் கணவர் முருகனிடம் விசாரித்த போது எனது மனைவிக்கு பெண் குழந்தைதான் பிறந்தது. எனது மனைவிக்கு 3 முறை கர்ப்பம் கலைந்தது. 4-வதாக பெண் குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் 5-வதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையை நாங்கள் வளர்த்துக்கொள்கிறோம் என்றார். ஜெயமாலினியும் தனக்கு பிறந்தது பெண் குழந்தைதான் என்று கூறி அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டார்.

பெண் குழந்தையை பெற்றுக்கொண்ட ஜெயமாலினி தனது குழந்தையை முத்தமிட்டு அரவணைத்தார்.

இதனை தொடர்ந்து ஆண் குழந்தைக்கு 2 பெண்கள் உரிமை கொண்டாடிய சம்பவம் முடிவுக்கு வந்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com