

இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானை சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக இந்தியாவுக்குள் நுழைந்து மும்பையில் கடந்த 26-11-2008 அன்று குண்டுகளை வெடித்தும், துப்பாக்கியால் சுட்டும் கொடூர தாக்குதல்கள் நடத்தினர். 150-க்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்ட இந்த தாக்குதல்களை பாகிஸ்தானில் அமர்ந்து கொண்டு, மூளையாக இருந்து செயல்படுத்தியவர், ஹபீஸ் சயீத்.
லஷ்கர் இ தொய்பா என்ற தீவிரவாத இயக்கத்தின் நிறுவனரான இவர், அந்த இயக்கத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜமாத் உத் தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்தும், அவரது கூட்டாளிகள் 4 பேரும் பாகிஸ்தான் அரசால் கடந்த ஜனவரி மாத இறுதியில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். அவரும், அவரது இயக்கத்தினர் 37 பேரும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டோரின் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
இந்த நிலையில் ஹபீஸ் சயீத் மீதான பாகிஸ்தான் அரசின் பிடி மேலும் இறுகி உள்ளது. அவர் தீவிரவாதிதான் என பாகிஸ்தான் அரசு ஒப்புக் கொண்டிருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அவரது பெயர் தற்போது தீவிரவாத தடுப்பு சட்ட பட்டியலின் 4-வது அட்டவணையில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹபீஸ் சயீத்தின் வீட்டுக்காவலை மேலும் ஒருமாத காலம் நீட்டிப்பு செய்து பஞ்சாப் மாகாண அரசு உத்தரவிட்டுள்ளது. ஹபீஸ் சயீத்தை விடுதலை செய்தால் அவரை கதாநாயகனாக சித்தரித்து விழா நடத்த ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த விழாவை தடுக்க முயன்றால் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதங்களை பிரயோகிக்கவும் திட்டமிட்டுள்ள ஆதரவாளர்கள் அதற்கான நிதியையும் ஆயுதங்களையும் சேமித்து வைத்துள்ளனர்.
எனவே, இந்நிலையில் அவரை விடுதலை செய்தால் மக்களின் பாதுகாப்புக்கும் சட்டம்-ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் கடந்த 25-ம் தேதியிட்ட உத்தரவாக, ஹபீஸ் சயீத்தின் வீட்டுக் காவல் மேலும் ஒருமாத காலத்துக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாகாண உள்துறை அமைச்சகம் நேற்று பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் ஹபீஸ் சயீத்தின் சார்பில் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.