

பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் ஸ்ரீதேவி பூதேவி உடனுறை ஆதி நாராயணசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் சில வருடங்களாக பாழடைந்து கிடக்கிறது.
இங்கு பூஜையும் நடக்க வில்லை. கோவிலில் உள்ள பொருட்கள் விற்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இதையடுத்து இந்த கோவிலை பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா இன்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த கோவிலை 2012-ம் ஆண்டு இந்து சமய அற நிலையத்துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. அதுவரை கோவிலில் தினமும் பூஜை நடத்தப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சென்ற பிறகு கோவில் பராமரிக்கப்பட வில்லை. கடந்த 2 வருடங்களாக இந்த கோவில் பூட்டிக் கிடக்கிறது. பூஜை நடைபெறவில்லை.
பகவானை பூட்டி வைத்தால் பஞ்சம் வரும், வெள்ளம் வரும். இந்த கோவிலில் புதர்மண்டி கிடக்கிறது. சமூக விரோதிகள் இங்கு சமூக விரோத செயல்களில் ஈடுபடுகிறார்கள். கோவில் பூட்டி கிடக்கிறது. பிறகு ஏன் அதற்கு நிர்வாகியை நியமித்து சம்பளம் கொடுக்க வேண்டும்.
இந்த கோவிலில் தாயார் சன்னதி இடிக்கப்பட்டுள்ளது. கோவில் உத்திரங்களில் இருந்த செம்மரக்கட்டைகள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளது. கோவிலில் விக்கிரகங்களும், சிலைகளும் மாயமாகி உள்ளன. சுமார் 10 டன் எடை கொண்ட செம்மரக்கட்டைகள் மற்றும் சிலைகள், பொருட்களை அதிகாரிகள் திருட்டுத்தனமாக விற்று கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளனர்.
இந்த கோவிலை இந்து சமய அறநிலையத்துறை மக்களிடம் ஒப்படைக்க வேண்டும். மோசடி செய்த பணத்தை கோவில் பெயரில் டெபாசிட் செய்ய வேண்டும்.
இந்து கோவில்களை விட்டு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சகம் வெளியேற வேண்டும். அப்போதுதான் இந்து கோவில்களை காப்பாற்ற முடியும். இல்லையென்றால் இந்துக்கள் வீதிக்கு வர வேண்டிய நிலை வந்துவிடும்.
திராவிட இயக்கத்தின் குறிக்கோள் இந்து கோவில்களை அழிக்க வேண்டும் என்பதுதான். எனவே அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோவில் கொள்ளையர்களின் கூடாரமாக மாறி விட்டது. இந்து சமய ஆன்றோர், சான்றோர் அடங்கிய வாரியத்தை அமைத்து இந்து கோவில்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆர்.கே.நகர் தேர்தலில் பா.ஜனதா கட்சி போட்டியிடுவது தொடர்பாக கட்சியின் தலைமை முடிவு செய்து அறிவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.