

பழனி:
பழனியில் வேல் சங்கம் ரத யாத்திரை நிறைவு விழா நடைபெற்றது. விழாவில் எச்.ராஜா கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்து மதம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்து வதற்காகவே இந்த வேல் சங்கம் ரத யாத்திரை நடத்தப்பட்டது. இதற்கு அனைத்து பகுதிகளிலும் மக்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. பழனி கோவில் மூலவர் சிலை செய்ததில் மோசடி நடந்ததை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் வெளி உலகுக்கு கொண்டு வந்துள்ளார்.
அதேபோல் காஞ்சிபுரம் ஏகாரம்பரேஸ்வரர் கோவிலிலும், தஞ்சை பெரியகோவிலிலும் சிலை மோசடி குறித்தும் விசாரிக்க வேண்டும். இங்கிருந்த சிலைகள் லண்டன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருக்கலாம் என தெரிகிறது.
பழனி கோவிலில் மூலவர் சிலையில் மோசடி நடந்ததுபோலவே தங்க கொடிமரம், சுவாமி புறப்பாடு செய்யும் தங்க வாகனங்கள் போன்றவற்றிலும் மோசடி நடந்திருக்கலாம். இது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.
ஆந்திரா மாநிலம் திருப்பதி கோவில் நிர்வாகம் சார்பில் தொலைக்காட்சி நடத்தப்படுகிறது. அதேபோல் ஆண்டுக்கு ரூ.200 கோடி வருவாய் வரும் பழனி கோவில் சார்பில் ஆன்மீக டி.வி. ஆரம்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. மத்திய நீர்வளத்துறை செயலர் 4 மாநில செயலர்களையும் அழைத்து இது தொடர்பாக பேசி வருகிறார். 4 மாநில அரசுகளும் காவிரி தொடர்பான அனைத்து அணைகளையும் மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தமிழக அரசு அந்த பணியை செய்து விட்டதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என்றார். #tamilnews