

தஞ்சாவூர்:
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது போல தமிழகத்தில் பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து வெளியிட்ட எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இந்தநிலையில் பெரியார் சிலையை உடைப்போம் என்று கருத்து தெரிவித்த எச்.ராஜாவை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை முன்பு பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் எச்.ராஜா உருவபொம்மையையும், உருவப்படத்தையும் தீ வைத்து எரித்தனர். சிலர் உருவப்படத்தை செருப்பால் அடித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மண்டல தலைவர் ஜெயராமன் தலைமை தாங்கினார்.
இதேபோல் ஒரத்த நாட்டில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் காந்தி தலைமையில் எச்.ராஜா உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எச்.ராஜாவை கண்டித்து அவரது உருவப்படத்தை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் எச்.ராஜாவின் உருவப்படம் எரிக்கப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரமணி தலைமை தாங்கினார். நகர செயலாளர் கலைச்செல்வன், திருவாரூர் மாவட்ட மாணவர் பெருமன்ற ஒருங்கிணைப்பாளர் துரை.அருள்ராஜன், ஒன்றிய துணைச்செயலாளர் ராகவன், விவசாய தொழிலாளர்கள் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன், இளைஞர் மன்ற ஒன்றிய நிர்வாகிகள் பாப்பையன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு, எச்.ராஜாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். #tamilnews