குட்கா ஊழல் வழக்கு: மாதவராவ், சீனிவாசராவுக்கு மேலும் 3 நாள் காவல் - சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ், சீனிவாசராவுக்கு மேலும் 3 நாள் காவலில் வைத்து விசாரிக்க சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.#Gutkhascam #GutkhaCBIProbe
குட்கா ஊழல் வழக்கு: மாதவராவ், சீனிவாசராவுக்கு மேலும் 3 நாள் காவல் - சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை:

தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. ஆனால், இந்த தடையை மீறி மாதவ ராவ், சீனிவாசராவ் ஆகியோர் குட்காவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தனர்.

இதற்காக அவர்கள், தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர், அரசு அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், இவர்களை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி ஆஜர்படுத்தி, 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி பெற்றனர்.

இந்த நிலையில், விசாரணையை முடித்து, 5 பேரையும் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர் படுத்தினர். அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார். இதன் பின்னர், சி.பி.ஐ. போலீசார், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘மாதவ ராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி திருநீலபிரசாத், இருவரையும் 3 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி வழங்கினார். 17-ந் தேதி மாலையில் 4 மணிக்கு அவர்கள் இருவரையும் ஆஜர் படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். #Gutkhascam #GutkhaCBIProbe

X

Maalai Malar
www.maalaimalar.com