பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வீட்டின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரிப் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் இடம்பெற்றிருந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி வீட்டின் மீது இன்று மர்மநபர்கள் இருமுறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். #Gunmenfire #pakistanjudge #NawazSharif
பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் நீதிபதி வீட்டின் மீது மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிறப்பு கூட்டு புலனாய்வுக்குழு அமைத்து விசாரணை நடத்த கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28--7-2017 அன்று அவர் பதவியை விட்டு விலகினார். 

பாகிஸ்தான் நாட்டை ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்(நவாஸ்) கட்சியின் தலைவர் பதவியில் அவர் நீடிக்கவும், அக்கட்சிசார்ந்த அவரது முடிவுகளை அமல்படுத்தவும் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், அவர் வாழ்நாள் முழுவதும் தேர்தல்களில் போட்டியிடவும் சமீபத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ‘பனாமா கேட்’ ஊழல் தொடர்பான விசாரணை குழுவில் இடம்பெற்றிருந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி இஜாஸ் உல் அஹ்சான் என்பவரின் வீட்டின்மீது இன்று மர்மநபர்கள் இருமுறை துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாகூர் நகரின் மாடல் டவுன் பகுதியில் உள்ள அவரது வீட்டின்மீது இன்று அதிகாலை 4.30 மணியளவிலும், காலை 9 மணியளவிலும் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிகளில் இருந்து பாய்ந்துவந்த இரு தோட்டாக்கள் வீட்டின் முன்புற கதவையும், சமைலறை கதவையும் துளைத்திருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பான செய்திகள் வெளியானதும் நீதிபதியின் வீடு மற்றும் அருகாமையில் உள்ள பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சாகிப் நிசார், நீதிபதி இஜாஸ் உல் அஹ்சான் வீட்டுக்கு வந்து பாதுகாப்பு தொடர்பாக லாகூர் போலீஸ் ஐ.ஜி.யுடன் ஆலோசனை நடத்தினார்.

பாகிஸ்தான் பிரதமர் ஷாஹித் காகான் அப்பாசி, பஞ்சாப் மாகாண முதல் மந்திரி ஷாபாஸ் ஷரிப், பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் இம்ரான் கான், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம், லாகூர் ஐகோர்ட் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். #tamilnews #Gunmenfire #pakistanjudge #NawazSharif

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com