கும்மிடிப்பூண்டியில் வடமாநில வாலிபர் தங்கி இருந்த வீட்டில் துப்பாக்கி பறிமுதல்

கும்மிடிப்பூண்டியில் வடமாநில வாலிபர் தங்கி இருந்த வீட்டில் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
வடமாநில வாலிபர் தங்கி இருந்த வீட்டில் துப்பாக்கி பறிமுதல்
வடமாநில வாலிபர் தங்கி இருந்த வீட்டில் துப்பாக்கி பறிமுதல்
Published on

கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டியில் உள்ள காட்டுக்கொல்லைத் தெருவைச் சேர்ந்தவர் கென்னடிவேல். இவருக்கு சொந்தமான 4 வீடுகள், கும்மிடிப்பூண்டி சிப்காட் பகுதியையொட்டி உள்ள புதுப்பேட்டை கிராமத்தில் உள்ளது. அவற்றை வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாடகைக்கு விட்டு உள்ளார்.

இதில் ஒரு வீட்டில் உத்திர பிரதேச மாநிலம் கோட்வா மாவட்டம் விஷ்ணுபுரா காரட் கிராமத்தைச் சேர்ந்த கன்ஹியா யாதவ் (47) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளில் வெல்டிங் கான்டிராக்ட் தொழில் செய்து வந்தார்.

கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தோடு சொந்த ஊருக்குச் சென்றார். பின்னர் அவர்கள் திரும்ப வில்லை. இதனால் வீட்டு உரிமையாளர் கென்னடி வேல் சந்தேகம் அடைந்தார்.

இந்த நிலையில், நேற்று மாலை அவர் கன்ஹியா யாதவ் தங்கி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றார். பீரோவை உடைத்து பார்த்த போது அதில் ஒரு சிறிய ரக துப்பாக்கியும், கோணி பைகளில் வங்கி கணக்கு புத்தகம் மற்றும் பேப்பர்களும் இருந்தன.

துப்பாக்கி உள்பட அனைத்து பொருட்களையும் கென்னடிவேல், கும்மிடிப்பூண்டி போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக ஒப்படைத்தார்.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் தலைமையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வடமாநில வாலிபர் தங்கி இருந்த வீட்டில் மேலும் சோதனை நடத்தினார். தலைமறைவான கன்ஹியா யாதவ் யார்? அவர் மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா? என்று போலீஸ் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் பூட்டி கிடந்த வடமாநில நபர் தங்கி இருந்த வீட்டில் துப்பாக்கி கிடைத்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com