மோடியின் மாநிலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள்: சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்

மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களை தொடர்ந்து பிரதமர் மோடியின் குஜராத் மாநிலத்திலும் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அம்மாநில விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மோடியின் மாநிலத்தில் கிளர்ந்தெழுந்த விவசாயிகள்: சாலையில் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம்
Published on

அகமதாபாத்:

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

விவசாயிகளின் போராட்டத்தால் மகாராஷ்டிர மாநிலமே ஸ்தம்பித்தது. போராட்டத்திற்கு பணிந்த முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க. அரசு விவசாயிகளின் 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது. 

இந்நிலையில், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மாநிலங்களை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி அம்மாநில விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக ஷத்ரிய தாகோர் சேனா அமைப்பு தலைமையில் பால் உற்பத்தியாளர்கள் சர்கீஜ்-காந்திநகர் நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான லிட்டர் பாலை கொட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இது தொடர்பாக தகோர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், “இரண்டு நாட்களுக்கு குஜராத் மாநிலம் முழுவதிற்கும் பால் விற்பனைக்கு தடை அறிவித்துள்ளோம். இதனையடுத்து காந்தி ஆசிரமம் முதல் காந்தி நகர் வரை பேரணி நடத்தவுள்ளோம். அதற்கு பிறகும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் ஆயிரக்கணக்கான விவசாயிகள் இணைந்து மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். எங்கள் நிபந்தனைகளை ஏற்கவில்லை என்றால், குஜராத் விவசாயிகளுக்கு அதிகாரத்தில் உள்ளவர்களை மாற்றும் வலிமை உள்ளது என்பதை ஒட்டுமொத்த இந்தியாவும் அறிய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த மாதம் மகாராஷ்டிராவில் நடைபெற்ற போராட்டத்தில் ஷிர்தி பகுதியில் அம்மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த விவசாயிகள் பாலை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com