குட்கா ஊழல்- மாதவராவ் உள்பட 5 பேர் சிபிஐ முன் ஆஜர்

குட்கா ஊழல் வழக்கில் மாதவராவ் உள்பட 5 பேர் சி.பி.ஐ. முன் ஆஜர் ஆனார்கள். மேலும் 2 நாள் காவலை நீடிக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளார். #gudkacorruption #cbi
குட்கா ஊழல்- மாதவராவ் உள்பட 5 பேர் சிபிஐ முன் ஆஜர்
Published on

சென்னை:

தமிழக அரசு கடந்த 2013-ம் ஆண்டு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தடை விதித்தது. இந்த தடையை மீறி மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோர் குட்காவை தமிழகம் முழுவதும் விற்பனை செய்தனர். இதற்காக அவர்கள், தமிழக அமைச்சர்கள், போலீஸ் டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன், முன்னாள் போலீஸ் கமி ஷனர் ஜார்ஜ் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு பல கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. போலீசுக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதன்படி, சி.பி.ஐ. போலீசார் வழக்குப்பதிவு செய்து, அமைச்சர், டிஜிபி, முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் உள்ளிட்டோர் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

பின்னர், குட்கா வியாபாரிகள் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, அரசு அதிகாரிகள் பாண்டியன், செந்தில் முருகன் ஆகியோரை சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். பின்னர், இவர்களை சி.பி.ஐ. கோர்ட்டில் கடந்த 10-ந்தேதி (திங்கட்கிழமை) ஆஜர்படுத்தி, 4 நாட்கள் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதிப்பெற்றனர்.

இந்த நிலையில், விசாரணையை முடித்து, 5 பேரையும் இன்று காலையில் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரையும் வருகிற 20-ந்தேதி வரை கோர்ட்டு காவலில் சிறையில் அடைக்க நீதிபதி திருநீலபிரசாத் உத்தரவிட்டார்.

இதன்பின்னர், சி.பி.ஐ. போலீசார், புதிய மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், ‘மாதவராவ், சீனிவாசராவ் ஆகியோரை மேலும் 2 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை தற்போது நடந்து வருகிறது.

இதற்கிடையில் செந்தில்குமார் உள்பட 3 பேரையும் புழல் சிறையில் அடைக்க, போலீசார் அழைத்து சென்றனர். #gudkacorruption #cbi

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com