

சங்கரன்கோவில்:
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 20ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். நாள் ஒன்றுக்கு சுமார் ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான துணி உற்பத்தி நடைபெற்று வருகிறது.
வருகிற ஜுலை மாதம் 1-ந்தேதி முதல் மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த உள்ளது. அதில் துணி நூல் மற்றும் துணி விற்பனை செய்பவர்களுக்கு 5 சதவீத வரியும், பாவு எடுத்து ஒப்பந்த முறையில் வேலை செய்து கொடுப்பவர்களுக்கு 18 சதவீத வரியும் விதிக்கப்பட உள்ளது. இதனால் விசைத்தறி உற்பத்தியாளர்கள் மற்றும் ஒப்பந்த முறையில் பாவு எடுத்து துணி வகைகளை உற்பத்தி செய்து கொடுப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சங்கரன்கோவிலில் பெரும்பாலும் ஒப்பந்த முறையில் பாவு எடுத்து அதன் மூலம் கூலிக்கு உற்பத்தி செய்து கொடுப்பவர்களே அதிகம். இந்நிலையில் இந்த வரி விதிப்பால் பெரும் பாதிப்பு ஏற்படும் என உற்பத்தியாளர்கள் கருதினர். ஆகவே ஜி.எஸ்.டி. வரி விதிப்பை கண்டித்து கடந்த 15-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.
அதன் பின்னரும் மத்தியஅரசு வரிவிதிப்பு கொள்கையில் எந்தவித மாற்றமும் செய்ய முன்வரவில்லை. இதனால் வருத்தமடைந்த விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் அதன் சார்பு சங்கங்கள் நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்கள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
அதன் பேரில் சங்கரன் கோவில் திருமுருகன் சிறு விசைத்தறி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன், வீடுகளில் விசைத்தறி மூலம் துணி உற்பத்தி செய்பவர்கள், அதன் தொடர்புடைய அனைத்து தொழில்கள், மற்றும் தொழிலாளர்கள் தங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை இன்று காலை 6 மணி முதல் தொடங்கினர்.
இதனால் சங்கரன்கோவில் நகர் மற்றும் சுப்புலாபுரம், புளியங்குடி பகுதிகளில் உள்ள அனைத்து விசைத்தறி கூடங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. விசைத்தறி தொழிலோடு சம்பந்தப்பட்ட, சாயப்பட்டறைகள், பாவு உற்பத்தி நிலையங்கள், உள்ளிட்ட அனைத்து தொழில் நடைபெறும் இடங்களும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சங்கரன்கோவில் பகுதியில் துணி உற்பத்தி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விசைத்தறி தொழிலாளர்கள் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தி லட்சுமியாபுரம் தெரு பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று சங்கரன்கோவில் தாசில்தாரிடம் வேலைநிறுத்தம் பற்றிய விளக்க மனுவை அளித்தனர்.