ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலைவாசி உயராது என்று மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் விலைவாசி உயராது: நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்
Published on

மத்திய அரசு, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) ஜூலை 1-ந் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இந்த வரி விதிப்பு முறை குறித்து விளக்கும் வகையில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கலைவாணர் அரங்கில் நேற்று கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்குக்கு, தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எம்.என்.ராஜா, செயலாளர் கரு.நாகராஜன் உள்பட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் குத்துவிளக்கேற்றி கருத்தரங்கை தொடங்கி வைத்தார். உற்பத்தியாளர்கள், வணிகர்கள், ஓட்டல் துறையை சேர்ந்தவர்கள், சிறு, குறு தொழில் முனைவோர், சேவை நிறுவனங்கள், சினிமா துறையினர் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் பங்கேற்று ஜி.எஸ்.டி. வரி தொடர்பான தங்களுடைய சந்தேகங்கள், விளக்கங்கள் குறித்து கேள்வி எழுப்பினர்.

அந்த கேள்விகளுக்கு, நிர்மலா சீதாராமன், ஜி.எஸ்.டி. தலைமை கமிஷனர் (சென்னை) சி.பி.ராவ், ஜி.எஸ்.டி. கமிஷனர் (திருச்சி) ஜே.எம்.கென்னடி, ஆடிட்டர் சேகர் ஆகியோர் விளக்கம் அளித்தனர். வரி விதிப்பு முறை குறித்தும், அது கணக்கிடப்படுவது குறித்தும் தெளிவாக எடுத்துக்கூறினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா, “பேக்கரி பொருட்கள் மற்றும் ஓட்டல்களில் சாப்பிடும் உணவுகளுக்கும் விலக்கு அளிக்கவேண்டும்” என்று கோரினார். இதேபோல சண்டைபயிற்சி நிபுணர் ஜாக்குவார் தங்கம், “சினிமா தயாரிப்பாளர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும்” என்று கோரிக்கை வைத்தார். பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் தங்களுடைய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை ஜி.எஸ்.டி. கமிஷனரிடம் கொடுத்தனர்.

இதையடுத்து கருத்தரங்கில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

சட்டசபையில் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு, ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றியதற்கு தமிழக அரசுக்கு நான் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கருத்தரங்கை அனைத்து மாவட்டங்களில் நடத்தவேண்டும் என்பதே அரசின் விருப்பம். அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். சிறு வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் ஜி.எஸ்.டி. இருக்கிறது.

எங்கேயும் இப்போது இல்லாத வரியை கொண்டுவரவில்லை. இருக்கிற வரியை ஜி.எஸ்.டி.யின் உள்ளே கொண்டுவந்து உள்ளோம். ஒருவேளை குறைந்திருக்கலாமே தவிர, கூடுதலாக வரி விதிக்கப்படவில்லை. வணிகர்கள் பதிவு செய்தால் வரி செலுத்துங்கள்.

ஆனால் பதிவு செய்வதற்கு கட்டாயம் இல்லை. அதிகாரிகள் வந்து விசாரித்த நிலை மாறி, கம்ப்யூட்டர் மூலமாக வியாபார கணக்குகளை வியாபாரிகளே மேற்கொள்ளலாம். வெளிப்படையான வரி விதிப்பு என்பதால், அதிகாரிகள் வந்து லஞ்சம் பெறமுடியாது. லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் ஜி.எஸ்.டி. தொடர்பாக கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது. இதில் வியாபாரிகளுக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்த்து வைக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக தான் தற்போது இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. ஜி.எஸ்.டி. தொடர்பாக அடிக்கடி தோன்றும் கேள்விகளுக்கு வலைதளங்களில் பதில்கள் இருக்கின்றன.

வியாபாரிகள் வலைதளத்துக்கு சென்று தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம். மூலம் நிவர்த்தி செய்யப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் இ-மெயில் முகவரியும் வழங்குகிறோம். அதில் கேள்வி கேட்பவர்களுக்கும் பதில் தெரிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரிசி வியாபாரிகளுக்கு ஜி.எஸ்.டி. வரி அதிகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனரே?

பதில்:- ‘பிராண்ட்’ பெயர் இல்லாமல், டிரேடு மார்க் (வணிக முத்திரை) இல்லாமல் இருக்கக்கூடியவர்களுக்கு வரி இல்லை. அதேபோல் ரூ.20 லட்சத்துக்கும் குறைவாக விற்பனை செய்பவர்களுக்கும் வரி இல்லை.

கேள்வி:- ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் பொதுமக்களும் பாதிக்கப்படுவதாக சொல்கிறார்கள். அவர்களுக்கு எதுவும் விளக்கம் அளிப்பீர்களா?

பதில்:- பொதுமக்களுக்கு ஒரு விளக்கம், வியாபாரிகளுக்கு ஒரு விளக்கம் என்று இல்லை. எல்லோருக்கும் ஒரே விளக்கம் தான். இந்த சரக்கு சேவை வரியால் விலைவாசி உயராது.

கேள்வி:- இதன் மூலம் இந்தியாவின் வருவாய் எத்தனை சதவீதம்? எந்த அளவு உயரும்?

பதில்:- அதற்கு பதில் அளிக்கும் நிலையில் நான் இல்லை.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com