ஜிஎஸ்டி கணக்கு தாக்கலை எளிமைப்படுத்த 27வது கவுன்சில் கூட்டத்தில் முடிவு

நேற்று நடந்த 27-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், ஜிஎஸ்டி வரி தாக்கல் முறையை மேலும் எளிதாக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. #GST #GSTCouncilMeet
ஜிஎஸ்டி கணக்கு தாக்கலை எளிமைப்படுத்த 27வது கவுன்சில் கூட்டத்தில் முடிவு
Published on

புதுடெல்லி:

நாட்டின் மிகப்பெரிய வரி சீர்திருத்தமாக கருதப்படும் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி நடைமுறைக்கு வந்தது. இதன்மூலம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்த 30-க்கும் மேற்பட்ட மறைமுக வரிகள் ஒழிக்கப்பட்டு ஒரே வரி என்ற அடிப்படையில் விதிக்கப்படுகிறது. 

இந்நிலையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 27-வது கூட்டம் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. அருண் ஜேட்லிக்கு சமீபத்தில் சிறுநீரக சிகிச்சை நடைபெற்றதால் தொற்று ஏற்படக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதால் வீடியோ கான்ஃபரன்ஸ் முறையில் இந்த கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி தாக்கல் முறையை எளிதாக்குவதற்கு அமைச்சரவை குழு அளித்த பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. முன்பு மாதத்துக்கு மூன்று தாக்கல்கள் செய்யப்பட்டு வந்த சூழலில் இனி ஒருமுறை மட்டும் வரிதாக்கல் செய்தால் போதுமானது என கவுன்சில் முடிவெடுத்திருக்கிறது. ஆறு மாதத்துக்குள் இது நடைமுறைக்கு வரும் என நிதித்துறை செயலாளர் ஹஷ்முக் ஆதியா தெரிவித்தார்.

ஜிஎஸ்டி நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குதாரர் அமைப்பினை மாற்றுவதற்கு கவுன்சில் ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ஜிஎஸ்டி நெட்வொர்க்கை முழுக்கவும் ஒரு அரசுசார் நெட்வொர்க்காக மாற்ற முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிஜிட்டல் மற்றும் காசோலையை ஊக்குவிக்கும் விதமாக அந்த வகை பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் பட்சத்தில் 2 சதவீத சலுகை வழங்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த பரிந்துரையை ஐந்த நபர் குழுவுக்கு (மாநில அமைச்சர்கள் குழு) ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. அடுத்த கூட்டத்துக்கு முன்பாக இந்த குழு தன்னுடைய பரிந்துரையை வழங்கும். #GST #GSTCouncilMeet

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com