ஜி.எஸ்.டி. வரி உயர்வால் திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி கடும் பாதிப்பு

ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின.
பின்னலாடை நிறுவனத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள்.
பின்னலாடை நிறுவனத்தில் வேலைபார்க்கும் தொழிலாளர்கள்.
Published on

திருப்பூர் :

உலக அளவில் பருத்தி உற்பத்தியில் இந்தியா முன்னிலையில் இருந்தாலும் ஆயத்த ஆடை ஏற்றுமதியில் பின் தங்கி உள்ளது.

இதனால் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகள் வழங்கி வந்தன. ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. மேலும் ஏற்றுமதி நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டு வந்தன.

திருப்பூர் மாவட்டத்தில் 8 ஆயிரம் பின்னலாடை நிறுவனங்கள் உள்ளது. இத்தொழிலை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. மத்திய, மாநில அரசுகளின் ஊக்கத்தால் பின்னலாடை நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து ஆர்டர்கள் பெறுவதில் ஆர்வம் காட்டி வந்தன.

ஆனால் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு பின்னலாடை நிறுவனங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக ஜி.எஸ்.டி.க்கு பிறகு அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் ரீபன்ட் 9 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்து விட்டது. வரிசலுகை முறைகளும் மாற்றப்பட்டு விட்டன. ஆயத்த ஆடைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட்டாலும், அரசாங்கத்திடம் இருந்து வழங்கப்பட்டு வந்த ஊக்கத்தொகை, உற்பத்தி சலுகை ஆகியவை நிறுத்தப்பட்டு விட்டன.

இதனால் ஏற்றுமதி நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறும் ஆர்டர்களை குறைத்து விட்டனர். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் ஆர்டர்கள் பெறும் சதவீதம் 30-ஆக குறைந்து விட்டதாக பின்னலாடை நிறுவன உரிமையாளர்கள் கூறினர்.

இதுகுறித்து பின்னலாடை நிறுவன நிர்வாகிகள் கூறியதாவது:-

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக சீனா, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளன. அந்த நாடுகளில் ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு பல்வேறு சலுகைகள் வழங்குகின்றன. இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் முன்பு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டன. என்றாலும் ஜி.எஸ்.டி. வரி விதிப்புக்கு பிறகு நிலைமை அப்படியே மாறி விட்டது.

திருப்பூரில் ஒவ்வொரு பின்னலாடை நிறுவனங்களும் 5 யூனிட், 6 யூனிட்களை நிறுவி இருந்தனர். தற்போது ஆர்டர்களை குறைத்து விட்டதால் அனைத்து தொழிலாளர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியாத நிலை உள்ளது. இதனால் ஏராளமான யூனிட்கள் மூடப்பட்டு விட்டன. எனவே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

இங்கு ஒவ்வொரு வருடமும் தொழிலாளர்களுக்கு 2 மாத சம்பளம் தீபாவளி போனசாக வழங்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு தொழிலாளர்களுக்கு குறைந்த அளவே போனஸ் வழங்கப்பட்டது. திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களே அதிகம் வேலை பார்க்கின்றனர். அவர்களுக்கு தினசரி வேலை இல்லாததால் பலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com