சுவீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் - ஓராண்டுக்கு பிறகு பள்ளிக்கு திரும்பிய கிரேட்டா தன்பர்க்

இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பர்க், காலநிலை மாற்றத்திற்கான தனது தொடர் பிரசாரத்தையடுத்து, ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார்.
கிரேட்டா தன்பர்க்
கிரேட்டா தன்பர்க்
Published on

ஸ்டாக்ஹோம்:

சுவீடனைச் சேர்ந்த 17 வயது சிறுமி கிரேட்டா தன்பர்க். சுற்றுச்சூழல் மீது மிகுந்த அக்கறை கொண்ட இவர் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், உலக வெப்பமயமாதலை தடுக்க வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகம் முன்பு தனி ஒரு ஆளாக போராட்டம் நடத்தினார். இதன் மூலம் பிரபலமான அவர் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலராக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து கிரேட்டா தன்பர்க், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தனது பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவிட்டு உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு தொடர்பான போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கினார். காலநிலை மாற்ற பிரசாரத்திற்காக பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்ததால், அவர் தொலைதூர கல்வி முறையில் பாடங்களை படித்தார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற ஐ.நா. காலநிலை மாற்றத்திற்கான உச்சி மாநாட்டின் போது அவர் பேசியது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காலநிலை மாற்றம் தொடர்பாக உலக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார். அவரின் இந்த பேச்சு சர்வதேச அளவில் வரவேற்பை பெற்று பாராட்டுகளை குவித்தது. இந்த நிலையில் கிரேட்டா தன்பர்க், காலநிலை மாற்றத்திற்கான தனது தொடர் பிரசாரத்தையடுத்து, ஒரு வருடத்திற்கு பிறகு மீண்டும் பள்ளிக்கு திரும்பியுள்ளார். மீண்டும் பள்ளியில் சேருவது மகிழ்ச்சியாக இருப்பதாக அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்கூல் பேக்குடன் சைக்கிளில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். எனினும் எந்த நகரத்தில் உள்ள பள்ளியில் தனது படிப்பை தொடரப் போவதாக அவர் கூறவில்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com