அலோக் வர்மா மீதான ஊழல் புகார் குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க உத்தரவு

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா உள்ளிட்ட அதிகாரிகள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிவிசி விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. #CVCinquiry #CBIVsCBI #AlokVerma
அலோக் வர்மா மீதான ஊழல் புகார் குறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க உத்தரவு
Published on

சிபிஐ அமைப்பில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட இயக்குனர் அலோக் வர்மாவும், சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் ஒருவர் மீது மற்றொருவர் பரஸ்பரம் லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தனர். இந்த அதிகார மோதல் உச்சகட்டத்தை எட்டியதையடுத்து, சிபிஐ இயக்குனர் அலோக் வர்மா, சிறப்பு இயக்குனர்  ராகேஷ் அஸ்தானா இருவரும் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்.

அத்துடன் தற்காலிக சிபிஐ இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டு, உடனடியாக பொறுப்பேற்றார். சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா மீதான லஞ்ச புகார் குறித்து விசாரிக்க புதிய குழுவும் அமைக்கப்பட்டது.

இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ அதிகாரிகள் ஒருவர் மீது மற்றொருவர் கூறும் லஞ்ச புகார்கள் குறித்து ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.பட்நாயக் மேற்பார்வையில் ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முதலில் 10 நாட்களில் விசாரணையை முடிக்கும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர். அப்போது, பல்வேறு ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டி உள்ளதால் 10 நாட்கள் போதாது என்று ஊழல் கண்காணிப்பு ஆணையம் கேட்டுக்கொண்டது. இதையடுத்து 2 வாரம் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை நவம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். #CVCinquiry #CBIVsCBI #AlokVerma

X

Maalai Malar
www.maalaimalar.com