

விழுப்புரம்:
விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் வாலிபர் ஒருவர் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றித்திரிந்தார். இதனை அறிந்த புறக்காவல் நிலைய போலீசார் அந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் தன்னை போலீஸ் என அறிமுகபடுத்திக் கொண்டார். அதோடு விழுப்புரம் ஆயுதபடையில் பணியாற்றி வருவதாக போலீசாரிடம் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து அந்த வாலிபரிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு போலீசார் கூறினர். அவர் வைத்திருந்த அடையாள அட்டையை போலீசார் சரிபார்த்தபோது அது போலி என தெரியவந்தது. இவர் போலீஸ்போல் நடித்து ஏமாற்றியது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அதில் அவரது பெயர் படையப்பா என்கிற சிவா (வயது 25) என்றும், விழுப்புரம் அருகே உள்ள கடையம் கிராமத்தை சேர்ந்த தங்கமணி மகன் என்பதும் தெரியவந்தது. பி.எஸ்.சி. பட்டதாரியான இவர் வேலை எதுவும் கிடைக்காததால் தன்னை போலீஸ் என கூறி சுற்றித்திரிந்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து விழுப்புரம் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் 4 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து வாலிபர் சிவாவை கைது செய்தார். கைதான வாலிபர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.