சென்னையில் 43,000 ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவி மீட்டர்கள்

வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்த மத்திய அரசு உத்தரவிட்ட நிலையில் தமிழக அரசு முதல் கட்டமாக சென்னையில் ஓடும் 43,000 ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். மீட்டர்களும், பேனிக் பட்டன்களும் பொருத்த முடிவு செய்துள்ளது. #Auto #GPS
சென்னையில் 43,000 ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். கருவி மீட்டர்கள்
Published on

சென்னை நகரில் ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, பயணிகளிடம் தவறாக நடப்பது போன்றவற்றை தடுப்பதற்காக ஜி.பி.எஸ். மீட்டர்கள், பேனிக் பட்டன் ஆகியவற்றை பொருத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்காக ஆட்டோக்களுக்கு அரசே இலவசமாக ஜி.பி.எஸ். மீட்டர் வழங்கியது. ஆனால் ஜி.பி.எஸ். மீட்டர்கள் தட்டுப்பாடு ஆட்டோக்கள் ஓட்டுனர்கள் எதிர்ப்பு போன்ற காரணங்களால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் நாடு முழுவதும் பஸ்கள், வாடகைகார்கள், ஆட்டோக்கள் போன்ற வாகனங்களில் கடந்த மாதம் முதல் ஜி.பி.எஸ். கருவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாநில அரசுகள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியது.

இதையடுத்து தமிழக அரசு முதல் கட்டமாக சென்னையில் ஓடும் 43,000 ஆட்டோக்களில் ஜி.பி.எஸ். மீட்டர்களும், பேனிக் பட்டன்களும் பொருத்த முடிவு செய்துள்ளது.

தற்போது ஓலா, ஊபர், பாஸ்ட்ராக் போன்ற தனியார் போக்குவரத்து நிறுவன வாகனங்களில் ஜி.பி.எஸ். மீட்டர்கள் பொருத்தப்பட்டு அதில் கட்டண விவரம் நம் செல்போனில் காட்டிவிடும் முறை அமலில் உள்ளது. இனி சென்னையில் ஓடும் இதர ஆட்டோக்களிலும் இந்த ஜி.பி.எஸ். மீட்டர்கள் பொருத்தி இயக்கப்படும்.

ஜி.பி.எஸ். என்பது வாகனத்தின் இருப்படத்தை காட்டும் கருவியாகும். இதை வைத்து வாகனம் எந்த வழியாக செல்கிறது என்பதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்டுபிடித்து விடலாம்.

மேலும் பயணிகளுக்கு ஏதாவது ஆபத்து என்றால் ஜி.பி.எஸ். கருவியுடன் இணைக்கப்பட்டுள்ள பேனிக் பட்டனை அழுத்தினால் போதும். கட்டுப்பாட்டு அறையில் இருப்பவர்கள் உஷாராகி ஆட்டோ எண், டிரைவர் பெயர் போன்றவற்றை போலீசுக்கு தெரியப்படுத்தி அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் இருந்து போலீசார் உதவிக்கு வந்து விடுவார்கள்.

இது குற்றங்களை தடுக்க உதவும் என்பதால் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் மத்திய-மாநில அரசுகள் ஆர்வம் காட்டி வருகின்றன.

மேலும் ஆட்டோக்ககளில் பேரம் பேசாமல் பயணம் செய்யலாம். பயணம் செய்து முடித்ததும் ஜி.பி.எஸ். மீட்டரில் கட்டண விவரம் தெரியவரும். அதை மட்டும் செலுத்தினால் போதும் கட்டண விவரம் பிரிண்ட் செய்யப்பட்ட காப்பியாகவும் கிடைக்கும். இதை வைத்து முறைகேடு நடந்தால் புகார் செய்யலாம்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com