

சென்னை:
வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவி பொருத்தினால் அந்த வாகனம் எங்கு செல்கிறது, எந்த பகுதியில் இருக்கிறது என்று துல்லியமாக கண்டுபிடிக்க முடியும்.
இதன் மூலம் வாகனங்கள் கடத்தப்பட்டாலோ மற்றும் குற்ற நடவடிக்கைகளை தடுக்க முடியும்.
இதற்கிடையே பொது பயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படும் அரசு வாகனங்கள், பஸ்கள், பள்ளி-கல்லூரி வாகனங்கள், தனியார் பஸ்கள், கால்டாக்சி, ஆம்னி பஸ்கள், சுற்றுலா வாகனங்கள் ஆகியவற்றில் ஜி.பி.எஸ். கருவி மற்றும் அவசர கால உதவி பொத்தான் பொருத்தினால் மட்டுமே புதிய வாகனங்களை பதிவு செய்ய முடியும். இது ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்ட பிரிவின்கீழ் பயணிகள் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.
அதன்படி ஏப்ரல் 1-ந்தேதி முதல் பொது பயன்பாட்டுக்கான பஸ்கள், கார்களில் ஜி.பி.எஸ். கருவி, அவசர கால உதவி பொத்தான் ஆகியவை பொருத்தாமல் இருந்தால் அந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் பதிவு செய்ய கூடாது என்று வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு மாநில போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொது பயன்பாட்டுக்கான வாகனங்கள் 2 லட்சம் உள்ளன. இதில் 22,646 அரசு பஸ்கள், 786 தனியார் பஸ்கள், 4218 மினி பஸ்கள், 1000 ஆம்னி பஸ்கள், ஒரு லட்சம் கார்கள், 39 ஆயிரம் பள்ளி, கல்லூரி வாகனங்கள் அடங்கும்
ஆனால் 90 சதவீத கல்வி நிறுவனங்களின் வாகனங்கள் மற்றும் ஆம்னி பஸ்களில் ஜி.பி.எஸ். கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் அவசர கால உதவி பொத்தான் பொருத்தப்படவில்லை.
மொத்தமுள்ள 2 லட்சம் வாகனங்களில் 65 சதவீத வாகனத்தில் ஜி.பி.எஸ். கருவி, அவசர கால உதவி பொத்தான் இரண்டும் பொருத்தப்படவில்லை.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள வாகனங்களிலும் ஜி.பி.எஸ். கருவி, அவசர கால உதவி பொத்தான் பொருத்துவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோன்ற வாகனங்கள் தகுதி சான்றுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பிக்கும் போது ஜி.பி.எஸ். கருவி பொருத்த வலியுறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews