

பழனி:
திருப்பூர் மாவட்ட உடுமலைப்பேட்டையை சேர்ந்தவர் சங்கர். இவரும் பழனி கல்லூரியில் படித்து வந்த கவுசல்யா என்பவரும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு கவுசல்யாவின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனையும் மீறி கவுசல்யா வீட்டை விட்டு வெளியேறி சங்கரை திருமணம் செய்து கொண்டு தனியாக வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 13.3.2016-ந்தேதி உடுமலைப்பேட்டையில் சங்கரை கவுசல்யாவின் உறவினர்கள் ஓட ஓட விரட்டி படுகொலை செய்தனர். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொலை சம்பவத்தில் கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி உள்பட 6 பேருக்கு தூக்குதண்டனை விதித்து திருப்பூர் கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து கவுசல்யா தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி மற்றும் பாட்டி கோதையம்மாள் கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். பழனி அருகில் உள்ள குப்பம்பாளையம் பகுதியில் தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ராமன் என்பவரது மனைவி கோதையம்மாள் (70) என்பவர் 1.750 கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்தார்.
போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில் தனது மகளான சின்னச்சாமி மனைவி அன்னலட்சுமி(42) கஞ்சாவை விற்பனைக்கு கொடுத்ததாக தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் கோதையம்மாளையும், அன்னலட்சுமியையும் கைது செய்து பழனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாள் சிறைக்காவலில் அடைத்தனர்.
சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமியும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.