

போபால்:
பிரதமர் நரேந்திர மோடி 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ம் தேதி தூய்மை இந்தியா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் நாட்டை தூய்மையாக்க வேண்டும் மற்றும் 2019-ம் ஆண்டிற்குள் திறந்த வெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்பதாகும்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மத்தியப்பிரதேசம் மாநிலம் முழுவதும் திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஒழிக்க விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசு உத்தரவை மீறுவோர் மீது நடவடிக்கையும் எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் அசோக்நகர் மாவட்டத்தின் புடேரா கிராமத்தில் உள்ள அரசு ஆரம்பப்பள்ளியில் பணிபுரியும் உதவி ஆசிரியர் திறந்த வெளியில் மலம் கழித்ததாக கூறப்படுகிறது. அவர் தூய்மை இந்தியா திட்டத்தை மீறி செயல்பட்டதாக மாவட்ட கலெக்டருக்கு புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த ஆசிரியரை பள்ளியிலிருந்து பணியிடை நீக்கம் செய்து மாவட்ட கல்வி அதிகாரி உத்தரவிட்டார். மக்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டிய ஆசிரியரே இது போன்ற தவறு செய்வது பெரும் குற்றமாகும். மேலும் அவரது வீட்டில் கழிவறை இருந்த போதிலும் இவ்வாறு செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தூய்மை இந்தியா அமைப்பின் உறுப்பினர்கள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட கல்வி அதிகாரி ஆதித்யா நாரயணன் மிஷ்ரா தெரிவித்தார்.
இதுபோன்று மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் கடந்த ஜூன் மாதம் மட்டும் திறந்த வெளியில் மலம் கழித்த குற்றத்திற்காக 13 குடும்பங்களைச் சேர்ந்தவர்களிடமிருந்து சுமார் 4 லட்சம் ரூபாய் அபராதமாக பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.