பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு ஆஸ்பத்திரி நர்சுகள் 2 ஆயிரம் பேர் போராட்டம்

சென்னை அண்ணாசாலையில் பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசு ஆஸ்பத்திரி நர்சுகள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
டி.எம்.எஸ். வளாகத்தில் நர்சுகள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.
Published on

அரசு ஆஸ்பத்திரிகள் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த அடிப்படையில் நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டனர்.

மருத்துவ தேர்வு வாரியம் (எம்.ஆர்.பி.) மூலம் இவர்கள் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் மாத சம்பளம் ரூ.7,700 பெற்று வருகிறார்கள்.

இந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அரசுக்கு கோரிக்கை வைத்து வந்தனர். பல்வேறு கட்ட போராட்டம் மூலமாகவும் எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். ஆனால் சுகாதாரத்துறை அவர்களின் கோரிக்கையை இதுவரையில் ஏற்கவில்லை.

இந்த நிலையில் தமிழ்நாடு எம்.ஆர்.பி. நர்சு மேம்பாட்டு சங்கம் சார்பில் நர்சுகள் சென்னையில் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நர்சுகள் சென்னையில் இன்று குவிந்தனர்.

தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். அலுவலக வளாகத்தில் நுழைய முயன்றனர். ஆனால் நர்சுகள் திரள்வது குறித்த தகவல் அறிந்த போலீசார் குவிக்கப்பட்டனர். நர்சுகளை வளாகத்திற்குள் உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.


இதனால் நர்சுகள் அண்ணா சாலையில் உட்கார்ந்து சிறிதுநேரம் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உள்ளே செல்ல அனுமதித்தனர். இதையடுத்து நர்சுகள் டி.எம்.எஸ். வளாகத்தில் அமர்ந்து அமைதியான முறையில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து சங்கத்தின் தலைவி புஷ்பலதா, செயலாளர் சுதாசரன் ஆகியோர் கூறியதாவது:-

மருத்துவ தேர்வு வாரியம் மூலம் பணியில் அமர்த்தப்பட்டு 2 ஆண்டு ஆகிறது. ஆனால் இதுவரையில் நிரந்தரம் செய்யப்படவில்லை.

அரசு ஆஸ்பத்திரிகளில் நர்சுகள் நேரம் பார்க்காமல் பணிபுரிந்து வருகிறார்கள். குறிப்பாக டெங்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அதிக சிரமம் மேற்கொண்டு இரவு பகலாக பணி செய்தனர். ஆனால் எங்களுக்கு இன்னும் தொகுப்பூதியம் வழங்கி வருகிறார்கள்.

எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதாரத்துறைக்கு பலமுறை கடிதம் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. அதனால் இன்று அமைதியான முறையில் அமர்ந்து போராடி வருகிறோம். 191 அரசாணையை அமல்படுத்த வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கையாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com