கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை: அருண் ஜெட்லி தகவல்

கார்ப்பரேட் நிறுவனங்களின் ஒரு ரூபாய் கடன் கூட தள்ளுபடி செய்யப்படவில்லை என மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களில் ஒரு ரூபாய் கூட தள்ளுபடி செய்யவில்லை: அருண் ஜெட்லி தகவல்
Published on

புதுடெல்லி:

மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளது. ஆனால், விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யவில்லை என காங்கிரஸ் கட்சியின் தீபேந்தர் சிங் ஹூடா பாராளுமன்றத்தில் குற்றம்சாட்டினார்.

இதற்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி எழுத்து பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் அவர் கூறியதாவது:- 

கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனில் ஒரு ரூபாய் கூட மத்திய அரசு தள்ளுபடி செய்யவில்லை. இது பற்றி எதிர்க்கட்சிகள் அரசு மீது குற்றம்சாட்டுவதற்கு முன்னர், உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். கடனை தள்ளுபடி செய்வது என்பது வங்கிகளின் வணிக நோக்கிலான முடிவு. கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. 

கடந்த மார்ச் 31 நிலவரப்படி, விவசாயம் மற்றும் அதனை சார்ந்த வாராக் கடன்களின் மொத்த மதிப்பு, ரூ. 62,307 கோடியாக இருந்தது. இது 2016 மார்ச் மாதத்தில் ரூ. 52,964 கோடியாக இருந்தது. வேளாண்மை மற்றும் கிராமப் புறங்களில் மத்திய அரசு இந்த நிதியாண்டில் ரூ.2.92 லட்சம் கோடி முதலீடு செய்ய உள்ளது. இவ்வாறு ஜெட்லி கூறியுள்ளார்.

விவசாய கடன் தள்ளுபடி குறித்த திட்டம் ஏதும் இல்லை என மத்திய நிதித்துறை இணை மந்திரி சந்தோஷ் குமார் கங்வார் கூறினார். 

X

Maalai Malar
www.maalaimalar.com