மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சிக்கு ஆளுநர் பரிந்துரை

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.
ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி
ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி
Published on

புதுடெல்லி:

288 இடங்களை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.க. -105, சிவசேனா-56, தேசியவாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றி பெற்றன.

ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிலையில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா இந்த தடவை முதல்-மந்திரி பதவியை பெற்றுவிட வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதனால் பா.ஜ.க.வுக்கும், சிவசேனாவுக்கும் புதிய அரசு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதற்கிடையே, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து அளித்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

இதைத்தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சி அமைக்க பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆனால், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் ஆளுநரை சந்தித்த பாஜக எம்எல்ஏக்கள், மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை என தெரிவித்தனர்.

இதையடுத்து, மகாராஷ்டிரா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற இரண்டாவது கட்சி (56 இடங்கள்) என்ற முறையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவுக்கு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். ஆனால், ஆட்சி அமைக்க 2 நாட்கள் அவகாசம் அளிக்கும்படி கோரியுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி பரிந்துரை செய்துள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com