

நாகர்கோவில்:
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தத்தை உடனே பேசி முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நாகர்கோவிலில் நேற்று 2 இடங்களில் தொடர் முழக்க போராட்டம் நடந்தது.
ராணிதோட்டம் பணிமனை முன் நடந்த போராட்டத்துக்கு எல்.பி.எப். பொதுச்செயலாளர் சிவன்பிள்ளை தலைமை தாங்கினார். பொருளாளர் கனகராஜ் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யு. பொதுச் செயலாளர் சங்கரநாராயணபிள்ளை மற்றும் முத்துகருப்பன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பங்கேற்று கோஷங்களை எழுப்பினர்.
இதுபோல் மீனாட்சிபுரத்தில் உள்ள அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனை முன் நடந்த தொடர் முழக்க போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. துணை பொதுச்செயலாளர் பொன்.சோபனராஜ் தலைமை தாங்கினார். எல்.பி.எப். மாநில துணை தலைவர் வில்சன், சிதம்பரம், தங்கசெழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.