நதிகளை காக்க அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு

ஈஷா யோகா மையம் சார்பில் நதிகளை மீட்போம் பிரசார பேரணி தொடக்க விழா கோவையில் இன்று நடைபெற்றது. அப்போது நதிகளை காக்க அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசினார்.
நதிகளை காக்க அரசு தனி சட்டம் கொண்டு வர வேண்டும்: சத்குரு ஜக்கி வாசுதேவ் பேச்சு
Published on

கோவை:

நாட்டில் வறண்டு வரும் நதிகளை காப்பாற்றி, அதன் நீரோட்டத்தை அதிகரிக்க ஈஷா யோகா மையம் சார்பில் ‘நதிகளை மீட்போம்‘ பாரதம் காப்போம் என்ற விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக நாடு முழுவதும் விழிப்புணர்வு பேரணி நடைபெறுகிறது. பேரணியின் தொடக்க விழா கோவை வ.உ.சி. மைதானத்தில் நடந்தது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமை தாங்கி பேசியதாவது:-

இந்த பிரசார பயணத்தின் நோக்கம் நதிகளையும், மண்ணையும் பாதுகாக்க சட்டம் உருவாக்க வேண்டும் என்பதாகும். நதிகளை மீட்க அரசுகள் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட வேண்டும். கடந்த 12 ஆண்டுகளில் 3 லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாய பொருட்களின் விலை குறைவு, வங்கி கடன் ஆகியவை மட்டுமே காரணம் இல்லை. வறட்சிதான் முக்கிய காரணம். நமது நாட்டில் ஒரு இடத்தில் மழையால் அழிவும், மற்றொரு இடத்தில் மழை இல்லாததால் வறட்சி என்ற நிலைதான் உள்ளது. ஆறுகளை பாதுகாத்தால்தான் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும். நமது நாட்டில் உள்ள ஆறுகளில் ஏராளமான உயிரினங்கள் இருந்தது. ஆயிரம் வகைகளுக்கு அதிகமாக மீன்கள் இருந்தன. தற்போது அவைகள் இருக்கிறதா? என்றால் கேள்விக்குறிதான்.

நதிகள் பாதுகாக்கப்படாததால் விவசாயம் குறைந்து வருகிறது. இந்த நிலை நீடித்தால் தற்போது விவசாயம் செய்து வரும் அளவில் இருந்து 60 சதவீதம் குறைந்துவிடும். விரைவில் பாலைவனமாகவும் வாய்ப்பு உள்ளது. எனவே அதை தடுக்க நாம் நதிகளை பாதுகாக்க வேண்டும். அதற்காக 2 வகையில் மண் வளத்தை பாதுகாக்கலாம். மரங்களை அதிகமாக வளர்ப்பது, அதன் மூலம் விலங்குகளின் கழிவுகளை மண்ணில் சேர வைப்பது. அப்படி செய்தால் நீர் வளமும், மண் வளமும் அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் பஞ்சாப் கவர்னர் வி.பி.சிங் பத்நோர், மத்திய சுற்றுச்சூழல்துறை மந்திரி ஹர்சவர்த்தன் ஆகியோர் கலந்து கொண்டு, பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேவாக், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலிராஜ், பிரபல கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன், ஏ.பி.நாகராஜன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, கலெக்டர் ஹரிகரன், வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் ராமசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழிப்புணர்வு வாகனத்தை சத்குரு ஜக்கி வாசுதேவ் ஓட்ட, முன்புறத்தில் ஷேவாக் அமர்ந்து இருந்தார். இந்த பேரணி 16 மாநிலங்கள் வழியாக செல்கிறது. இதில் அவர் 7 ஆயிரம் கி.மீ. தூரம் வாகனத்தை ஓட்டிச்செல்கிறார். செல்லும் வழியில் முக்கிய இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி டெல்லியில் பேரணி முடிவடைகிறது.

முன்னதாக முக்கிய பிரமுகர்கள் நதிகளை காக்க வலியுறுத்தி பதாகைகளை கைகளில் ஏந்தி நின்று, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com