

நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே கருத்தாண்டிபட்டியை சேர்ந்தவர் மாரியப்பன் மகள் வினோபவா (வயது23). நிலக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் ஸ்டாப் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு செல்வதாக கூறி சென்ற வினோபவா வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் விளாம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரில் அதே பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் தியாகு (30) என்பவர்தான் தனது மகளை கடத்தி இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு வினோபவாவின் தாய் ராஜேஸ்வரியிடம் ஏற்பட்ட பிரச்சினையில் உனது மகளை கடத்துவேன் என தியாகு மிரட்டியுள்ளதாக புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் நர்ஸ் மற்றும் அவரை கடத்திய வாலிபரை தேடி வருகின்றனர். அரசு ஆஸ்பத்திரி நர்ஸ் கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.