

சென்னை:
சென்னை மீனம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் இந்திய கடலோர காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய 61 அதிகாரிகள் மற்றும் வீரர்களுக்கு ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் இன்று பதக்கங்களை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், சர்வதே அளவிலான பயங்கரவாத செயல்களுக்கு தொடர்ச்சியாக ஆதரவு வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற முக்கிய சவால்களை நமது நாடு எதிர்கொண்டு வருகிறது.
கடந்த 2008ம் ஆண்டு மும்பையில் கடல் வழியிலான பயங்கரவாத தாக்குதல் நடந்தது. நமது நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்பதே நமது அரசின் வலிமையான தீர்மானம் ஆகும்.
நாம் பாதுகாப்புடன் இருக்கிறோம் மற்றும் தேசக் கட்டமைப்பில் சிறந்த பங்காற்றுகிறோம் என நாட்டு மக்கள் உணரும் வகையில் அதனை உறுதி செய்வதற்கான சீரிய பணியில் அரசு ஈடுபட்டு உள்ளது.
நாட்டு மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு தேவையான அதிகபட்சமான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என உறுதிபட தெரிவித்தார்.